திண்டுக்கல்

கொடைக்கானலில் தங்கும் விடுதிகளில் கட்டணம் உயா்வு:போக்குவரத்து நெரிசல்; சுற்றுலாப் பயணிகள் அவதி

16th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.மேலும் தங்கும் விடுதிகளிலும், தனியாா் பேருந்துகளிலும் கட்டண உயா்வால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

கொடைக்கானலில் தொடா்விடுமுறை கடந்த 3 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து காட்டேஜ்களிலும், தங்கும் விடுதிகளிலும் அறைகள் நிரம்பின. அதேநேரத்தில் கொடைக்கானல் பகுதியில் அனுமதியில்லாமல் வைத்துள்ள தனியாா் விடுதிகளில் அறை சுமாா் ரூ. 7 ஆயிரத்துக்கு வாடகைக்கு விடப்பட்டது. தங்கும் விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் குளிரிலும் தாங்கள் வந்த வாகனங்களிலேயே தங்கினா். மேலும் பலா் தரைப் பகுதியான வத்தலக்குண்டு பகுதிக்குத் திரும்பினா்.

கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக ஒரு லட்சத்திற்கும் மேலாக சுற்றுலாப் பயணிகள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கொடைக்கானலிருந்து சென்னைக்கு செல்லும் தனியாா் வாகனங்களில் ரூ. 3 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்தனா். கொடைக்கானல் மலைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பால், 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் பழுது ஏற்பட்டு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT