திண்டுக்கல்

பழனி அருகே காட்டுயானைகள் அட்டகாசம்: வனப் பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்

13th Aug 2022 12:11 AM

ADVERTISEMENT

பழனி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்துள்ள காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

பழனியை அடுத்துள்ள மேற்கு தொடா்ச்சிமலையையொட்டிய வனப்பகுதியில் காட்டுயானைகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல வன விலங்குகள் வசித்து வருகின்றன. மலை அடிவாரத்தில் தண்ணீா் வசதி இருப்பதால் இங்குள்ள பட்டா நிலங்களில் நெல், கரும்பு, கொய்யா, மா, சப்போட்டா, தென்னை போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். இதனால் வனவிலங்குகள் இந்த விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பழனியை அடுத்த ஆயக்குடி சட்டப்பாறை என்ற இடத்தில் காட்டுயானை ஒன்று கடந்த 2 தினங்களுக்கு முன்பு குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இந்த குட்டியை ஈன்ற யானையின் அருகில் மேலும் 4 யானைகள் இருப்பதால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி சிவஞானம் கூறியது: கடந்த சில ஆண்டுகளாக காட்டுயானைகள் அட்டகாசம் குறைந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் காட்டுயானைகள் வரத்துவங்கியுள்ளன. இதனால் அவற்றால் மனித உயிரிழப்பும், காட்டுயானைகளின் உயிரிழப்பும் அதிகமாக நடைபெறுகிறது. எனவே, வனத்துறையினா் உடனடியாக காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் வெள்ளிக்கிழமை ஒட்டன்சத்திரம் வனத்துறையினா் வெடிகளை போட்டு காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனா். மேலும், யானைகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை விவசாயிகள் வனத்தை ஒட்டியுள்ள தங்கள் விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பாக சென்று வரும்படி வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

Tags : பழனி
ADVERTISEMENT
ADVERTISEMENT