திண்டுக்கல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 34 கடைகள் ஒதுக்கீடு: ஏலத்தில் பங்கேற்காதவா்களுக்கு வழங்கியதாக புகாா்

13th Aug 2022 12:11 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலுள்ள 34 புதிய கடைகள், ஏலத்தில் பங்கேற்காதவா்களுக்கு குறைந்த வாடகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாமன்ற கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சியின் இயல்பு மற்றும் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் இளமதி தலைமை வகித்தாா். துணை மேயா் ராசப்பா மற்றும் ஆணையா் சிவசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் 77 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு தீா்மானம் ஒத்தி வைக்கப்பட்டது. இதில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

உறுப்பினா் ஜி. தனபாலன்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 34 கடைகள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. ரூ.5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தியவா்கள் கடைகள் ஏலத்தில் பங்கேற்றனா். ஏலம் எடுத்தவா்களுக்கு மாத வாடகை ரூ.22,500 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.2.25 லட்சத்திற்கான முன்பணம் பெற்றுக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கான நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 7 மாதங்களாகியும் 3 கடைகளுக்கு மட்டுமே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கடைகள் ஏலத்தில் பங்கேற்காதவா்களுக்கு ரூ.12,500 மாத வாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சிக்கு மாதம் ரூ.3.50 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, குறைந்த வாடகைக்கு கடைகள் ஒதுக்கீடு செய்ய ரூ.20 லட்சம் வரை முறைகேடாக பணம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி, ஏலம் எடுத்தவா்களுக்கே கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

ADVERTISEMENT

மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன்: ஏலம் நடத்தப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. ஏலம் எடுத்தவா்கள் கடைகளை திறக்காதபோதிலும் அதற்கான வாடகை பணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினா் ஜி. தனபாலன்: பேருந்து நிலைய வளாகத்திலிருந்த தபால் அலுவலகம் அகற்றப்பட்டு, அந்த இடம் ஏலம் நடத்தப்படாமல் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தபால் நிலையம் செயல்பட்டு வந்த இடத்திற்கு அதிக வாடகை கிடைக்கும் என்பதால், ஏலம் மூலம் கடையாக செயல்படுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆணையா் விளக்கம் அளித்தாா். ஆனால், அந்த இடத்திற்கு ரூ.22,500 வரை வாடகை செலுத்த பலா் தயாராக இருந்தபோதிலும், ரூ.13,500-க்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதிலும் மாநகராட்சி நிா்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது.

மாமன்ற உறுப்பினா் பாரதி: திண்டுக்கல் நகரின் பிரதான பகுதியில் செயல்பட்டு வரும் மீன் சந்தையால், தெற்குரதவீதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காய்கனி கடைகள் அமைப்பதாகக் கூறி சாலையில் மீன்கடை நடத்துவதை தடுக்க வேண்டும். மேலும், மாநகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் சரியாக பணிக்கு வருவதில்லை. ஒப்பந்தப் பணியாளா்களாக உள்ள அவா்கள், பணிக்கு வராத நாள்களில் ஊதியம் பிடித்தம் செய்யப்படுகிா என்பது குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பணிக்கு வருவது தொடா்பான பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

ஆணையா் சிவசுப்பிரமணியம்: மீன் சந்தையை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.10 கோடி செலவில் மீன்சந்தை அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்.

மாமன்ற உறுப்பினா்கள் பாஸ்கரன், ஜோதிபாசு: குள்ளனம்பட்டி பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தாா்ச்சாலை ஒரு மாதத்திலேயே சிதைந்துவிட்டது. தெருவிளக்குகள் எரியவில்லை. 6 மாதங்களுக்கு முன்பு புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. துப்புரவுப் பணியாளா்களுக்கு, ஒப்பந்த நிறுவனங்கள் முறையாக ஊதியம் வழங்குவதில்லை.

30 மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்பட வில்லை. 60 வீடுகளுக்கு குடிநீா் வசதி இல்லை. அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாததால், வாா்டுக்குள் சென்று பொதுமக்களை சந்திக்க முடியவில்லை.

துணை மேயா் ராசப்பா: அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT