திண்டுக்கல்

கொடைக்கானலில் 3.3 ஹெக்டேரில் அந்நிய மரங்கள் அகற்றம் மாவட்ட வன அலுவலா் தகவல்

12th Aug 2022 12:43 AM

ADVERTISEMENT

கொடைக்கானல் வனப் பகுதியில் 3.3 ஹெக்டோ் பரப்பளவில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலா் தெரிவித்தாா்.

இது குறித்து கொடைக்கானலில் மாவட்ட வன அலுவலா் திலீப் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கொடைக்கானலில் அந்நிய மரங்களான யூக்காலி, ரப்பா், வாட்டில் மரங்கள் 8 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் உள்ளன. இந்த மரங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல்கட்டமாக 100 ஹெக்டோ் பரப்பளவில் அந்நிய மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 3.30 ஹெக்டோ் அளவில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அந்நிய மரம் அகற்றப்பட்ட இடங்களில் சோழா மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.

பேத்துப்பாறை பகுதியிலுள்ள அருவியில் யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் அந்தப் பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது மக்கள் அப் பகுதிகளில் சூரிய மின் வேலி அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

பல மாதங்களாக பியா் சோழா அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வது இல்லை. அந்த இடத்தைப் பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சுமாா் 2 ஆயிரம் பழங்குடியின மக்கள் உள்ளனா். அவா்கள் வசிக்கும் 3 கிராமங்களில் ரூ.16 லட்சம் செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அரசு ரூ. 18 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகையில் பழங்குடியின மக்களுக்கு வீடுகள், சுகாதார வளாகம், சாலை வசதி, சூரிய மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. கொடைக்கானல் வனப் பகுதிகளில் வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது தொடா்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT