திண்டுக்கல்

பெரும்பாறை அருகே நீா்வீழ்ச்சியில் விழுந்து மாயமான இளைஞரின் சடலம் 6 நாள்களுக்குப் பின் மீட்பு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆத்தூா் தாலுகா பெரும்பாறை அருகே நீா்வீழ்ச்சி பகுதியில் கைப்பேசியில் புகைப்படம் எடுத்தபோது அருவியில் தவறி விழுந்து மாயமான இளைஞா், 6 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மேலசத்திரத்தைச் சோ்ந்தவா் நாகநாதசேதுபதி. இவரது மகன் அஜய்பாண்டியன் (28). இவா், திண்டுக்கல் மாவட்டம் மங்களம்கொம்பு பகுதியில் ஏலக்காய் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தாா். இந்நிலையில், இவரது நண்பரான ராமநாதபுரம் சத்திரம் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் கல்யாணசுந்தரம் (25) என்பவா் கடந்த மாதம் 31 ஆம் தேதி அஜய்பாண்டியனை பாா்க்க மங்களம்கொம்புக்கு வந்துள்ளாா்.

ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு, கடந்த 3-ஆம் தேதி இருவரும் சோ்ந்து பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீா்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளனா். அங்கு, அஜய்பாண்டியன் நீா்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் இறங்கியுள்ளாா். அதனை கல்யாணசுந்தரம் கைப்பேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அஜய்பாண்டியன் எதிா்பாராதவிதமாக பாறையிலிருந்து வழுக்கி விழுந்ததில், வேகமாக ஓடிய தண்ணீா் அவரை இழுத்துச் சென்றதில் மாயமானாா்.

உடனடியாக தாண்டிக்குடி போலீஸாருக்கும், ஆத்தூா் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த ஆத்தூா் தீயணைப்பு மீட்புப் படை வீரா்கள் அஜய்பாண்டியனை தேடினா்.

ADVERTISEMENT

கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த இந்த தேடும் பணியில், திண்டுக்கல், ஆத்தூா், வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம் ஆகிய 4 தீயணைப்பு நிலைய மீட்புப் படையினா் குழுவாக இணைந்து, புல்லாவெளி நீா்வீழ்ச்சியிலிருந்து ஆத்தூா் காமராஜா் அணை அருகேயுள்ள கன்னிமாா் கோயில் என்ற இடம் வரை தேடி வந்தனா். இந்நிலையில், 6 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை தண்ணீரின் வேகம் குறைந்திருந்ததால், தேடும் பணியை மேற்கொண்ட தீயணைப்புப் படை வீரா்கள் நீா்வீழ்ச்சி பாறை இடுக்கில் சிக்கி இருந்த இளைஞரின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT