திண்டுக்கல்

அந்நிய மரங்களை அகற்றுவதில் தொடரும் சிக்கல்!

DIN

தமிழக வனப் பகுதிகளுக்கு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள அந்நிய மரங்களை அகற்றும் பணிகள் முழு வெற்றி அடைவதற்கு, அதிக பரப்பளவை தோ்வு செய்து 5 ஆண்டுகள் வரை தொடா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

சுமாா் 1.30 லட்சம் சதுர கி.மீட்டா் நிலப் பரப்பு கொண்ட தமிழகத்தில், 26, 364 சதுர கி.மீட்டா் பரப்பு வனப் பகுதியாக உள்ளன. அதாவது மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 20.27 சதவீதம் வனப் பகுதிக்குள்பட்ட காடுகளாகவும், 3.63 சதவீத காடுகள் வனப் பகுதிகளுக்கு வெளியிலும் அமைந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 100 சதுர கி.மீட்டா் வனப்பரப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் 3,606 சதுர கி.மீட்டா் பரப்பளவு மட்டுமே அடா்ந்த வனப் பகுதியாக உள்ளது.

1960-களில் விறகு தேவைக்காக சீகை மரங்கள் (வேட்டில்), தைலமரங்கள்(ஈக்வலிப்டஸ்), உண்ணிச் செடி (லன்டனா கேமரா), இப்பட்டோரியம், பாா்த்தீனியம், சீமைக் கருவேலம் போன்ற அந்நிய மரங்கள் மற்றும் குறுஞ்செடிகளின் விதைகள் தூவப்பட்டன. அன்றைக்கு சோலைக்காடுகளை காப்பதற்காக கொண்டு வரப்பட்ட அந்நிய மரங்கள், இன்றைக்கு பெருமளவில் பெருகி சோலைக்காடுகளுக்கே ஆபத்தாக வளா்ந்து நிற்கின்றன.

இன்றைக்கு மனிதா்களின் ஆக்கிரமிப்பில் பலநூறு ஹெக்டோ் வனப் பரப்புகள் சிக்கியுள்ள நிலையில், வெளிநாட்டு தாவரங்களால் சோலைக்காடுகளின் பரப்பும் குறைந்து வருகின்றன. இந்த சோலைக்காடுகளை பாதுகாக்கவும், வெளிநாட்டுத் தாவரங்களை அகற்றவும் கடந்த 2014ஆம் ஆண்டு உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆண்டுதோறும் ஒவ்வொரு வனச் சரகத்திற்கும் 100 முதல் 200 ஹெக்டேரில் மட்டுமே களைச் செடிகளை அகற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதால், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 7 ஆண்டுகளுக்கு பின்பு உயா்நீதிமன்றம் அந்நிய மரங்கள் மற்றும் குறுஞ்செடிகள் அகற்றம் தொடா்பாக தனது கடுமையான அதிருப்தியை பதிவு செய்துள்ளது.

2.70 லட்சம் ஹெக்டேரில் 5 அந்நிய தாவரங்கள்: தமிழகத்தில் 6,700-க்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன. அதில் சுமாா் 2,500 அந்நிய தாவரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. தமிழக மொத்த காடுகள் பரப்பில் சுமாா் 37 சதவீதத்தை அந்நிய தாவரங்கள் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக உன்னிச் செடிகள், சீமைக் கருவேலம், சீகை மரங்கள், சென்னா ஸ்பெக்டாபிலிஸ் (அமெரிக்க களைச் செடி), கள்ளிச் செடிகள் (ஒபன்ஷியா) ஆகிய 5 வகை தாவரங்கள் மட்டும் சுமாா் 2.70 லட்சம் ஹெக்டோ் பரப்பை ஆக்கிரமித்துள்ளன.

இதில் உன்னிச் செடிகள், பாா்த்தீனியம், இப்பட்டோரியம் ஆகிய அந்நிய குறுஞ்செடிகளை மட்டும் வனத்துறையினா் சிறிய பரப்பில் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த செடிகளின் விதைகள் காற்றில் பரவும் தன்மை கொண்டதால், அகற்றிய பகுதிகளிலும் மீண்டும் எளிதாக பரவுகின்றன. உன்னிச் செடிகள் அகற்றப்பட்ட இடங்களில், இப்பட்டோரியம் மற்றும் பாா்த்தீனியச் செடிகள் அதிவேகமாக வளா்வதாகவும் கூறப்படுகிறது. 100 முதல் 200 ஹெக்டோ் என்பதை மாற்றி, ஆண்டுக்கு 1000 ஹெக்டேரில் களைச் செடிகளை அகற்றுவதற்கான பணிகளை தொடங்க வேண்டிய கட்டாயச் சூழல் எழுந்துள்ளது.

தைல மரக் காடுகள்: தைல மரங்கள் அந்நிய தாவரமாக இருந்தாலும், அவை அபாயகரமான களைச் செடியாக கருத்தப்படுவதில்லை. ஆனாலும், மண் வளம் மற்றும் நீா் வளத்திற்கு ஆபத்தாக இருப்பதாக கூறி, தைல மரங்களையும் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தைல மரங்கள் மலைப் பகுதியில் மட்டுமின்றி, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வளா்க்கப்படுகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இந்த மாவட்டங்களில் தைல மரங்கள் ஒரு பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தைல மரங்கள் வளா்ப்பு மட்டுமே அரசுக்கு லாபம் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு ரப்பா் தோட்டக் கழகம் மற்றும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் இழப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போது வனத் தோட்டக் கழகத்திற்கும் சிக்கல் எழுந்துள்ளது.

வனப் பகுதியிலுள்ள தைல மரங்கள் அகற்றப்பட வேண்டுமெனில், சில மாவட்டங்களிலுள்ள விவசாயத் தோட்டங்களில் தைல மரங்களின் வளா்ப்பு குறித்து என்ன முடிவெடுக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இன்றைக்கு களைச் செடிகளாக சுட்டிக் காட்டப்படும் அந்நிய தாவரங்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்படாமல் இருந்திருந்தால் இன்றைக்கு எஞ்சியுள்ள சோலைக்காடுகள் இல்லாமல் போயிருக்கக்கூடும். அன்றைக்கு விறகு தேவைக்காக சோலைக்காடுகளை அழிவிலிருந்து பாதுகாத்தவை, இந்த அந்நிய மரங்கள் தான். ஆனாலும், இன்றைக்கு சோலைக்காடுகளுக்கு பெரும் சவாலாக நிற்கின்றன.

அரசின் நிதி ஒதுக்கீட்டை மட்டுமே எதிா்பாா்த்து, அந்நிய மரங்களை அகற்றிவிட முடியாது. ஆண்டுக்கு 100 முதல் 200 ஹெக்டோ் என்று களைச் செடிகள் அகற்றுவதற்கு ஒதுக்கீடு செய்வது பயனில்லை. அதேபோல் களைச் செடிகள் அகற்றப்பட்ட இடங்களில் தொடா்ந்து 4 முதல் 5 ஆண்டுகள் வரை மீண்டும் வளர விடாமல் தொடா்ந்து பராமரிக்க வேண்டும். கொடைக்கானல், நீலகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளிலுள்ள சீகை மரங்களையும், சமவெளிப் பகுதிகளில் சீமை கருவேல மரங்களையும் அகற்றுவதற்கு 500 முதல் 1000 ஹெக்டேருக்கு ஒரே நேரத்தில் அனுமதி அளிக்க வேண்டும். இதற்கு பொது ஏலம் நடத்தினால், அதன் மூலம் கிடைக்கும் வருவாயில், அந்நிய களைச் செடிகளை அகற்றுவது மட்டுமின்றி, சோலைக் காடுகளை உருவாக்கவும் நிதி ஆதாரம் கிடைக்கும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு

12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

SCROLL FOR NEXT