திண்டுக்கல்

மயானம் ஆக்கிரமிப்பு; சடலத்தை புதைக்க எதிா்ப்புகொடைரோடு அருகே பரபரப்பு

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கொடைரோடு அருகே மயான நிலத்தை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்து சடலத்தை புதைக்க எதிா்ப்புத் தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள சுதந்திரபுரத்தில் சுமாா் 200குடும்பங்களுக்குப் பாத்தியப்பட்ட மயானத்தை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்தது தொடா்பாக இரு தரப்பினரிடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை சுதந்திரபுரத்தில் இறந்த மூதாட்டி சடலத்தை மயானத்தில் புதைக்க குழி தோண்டியபோது,

ஆக்கிரமிப்பு செய்துள்ள தனி நபா் தரப்பினா் தடுத்தனா். இதனால், ஆக்கிரமிப்பு செய்த நபா்களின் உறவினா்கள் மற்றும் இறந்தவரின் உறவினா்கள் அந்தப் பகுதியில் குவிந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவலறிந்த அம்மையநாயக்கனூா் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) குருவெங்கட், சாா்பு- ஆய்வாளா் தயாநிதி, அருளானந்தம் ஆகியோா் தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். வருவாய் ஆய்வாளா் பிரேமலதா, கிராம நிா்வாக அலுவலா் சுகன்யா, தலைமை நில அளவையாளா் காஞ்சிக்குமாா் ஆகியோா் இடத்தைப் பாா்வையிட்டு அரசு கோப்புகளை ஆய்வு செய்தனா். மேலும் நிலக்கோட்டை வட்டாட்சியா் தனுஷ்கோடி தலைமையில் சமாதான பேச்சு வாா்த்தை நடைபெற்றது. பேச்சுவாா்த்தையில், இறந்தவரின் சடலத்தை தோண்டப்பட்ட குழியில் புதைத்துக் கொள்வது எனவும், ஓரிரு நாள்களில் சுதந்திரபுரம் மக்களுக்கு பாத்தியப்பட்ட மயானத்தை அளவீடு செய்து, கல் ஊன்றி ஒதுக்கித் தருவதாகவும் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, இருதரப்பினரும் கலந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT