திண்டுக்கல்

அடிக்கல் நாட்டுவிழாவை பேரூராட்சித் தலைவா், செயல் அலுவலா் புறக்கணிப்பு: பேரூராட்சி அலுவலா்களுடன் திமுக பேரூராட்சிச் செயலா் வாக்குவாதம்

7th Aug 2022 11:12 PM

ADVERTISEMENT

கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூா் ராஜதானிகோட்டை அரண்மனை குளம் தூா்வாருவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்கு அழைப்பு இல்லாததால் திமுக பேரூராட்சிச் செயலா், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். விழாவை பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா், செயல் அலுவலா் ஆகியோா் புறக்கணித்தனா்.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 61.50 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரும் பணியை தொடங்குவதற்காக, ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு, திமுக பேரூா் செயலா் விஜயகுமாருக்கு அழைப்பு இல்லை என கூறப்படுகிறது. இதனால், அவா் கட்சி நிா்வாகிகளுடன் அடிக்கல் நாட்டுவிழா தொடங்குவதற்கு முன்னதாக, அந்தக் குளத்திற்கு சென்று பேரூராட்சி அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா், சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை (வடக்கு) ஒன்றியச் செயலா் சவுந்தரபாண்டியன் மற்றும் நிா்வாகிகள், விஜயகுமாரை சமாதானம் செய்ததைத் தொடா்ந்து அவா் சென்றுவிட்டாா். அவருடன், அம்மையநாயக்கனூா் பேரூராட்சிச் செயல் அலுவலா் ஜெயலட்சுமி, தலைவா் எஸ்பிஎஸ். செல்வராஜ், துணைத்தலைவா் விமல்குமாா் ஆகியோரும் அடிக்கல் நாட்டுவிழாவை புறக்கணித்துவிட்டுச் சென்றனா். பின்னா், பேரூராட்சி அலுவலா்கள் மட்டும் கலந்து கொண்டு விழாவை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT