திண்டுக்கல்

வாக்காளா் பட்டியலில் திருத்தம்: ஆண்டுக்கு 4 முறை வாய்ப்பு

2nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் ஆண்டுக்கு ஒரு முறை (ஜன.1) மட்டுமே வழங்கப்பட்டிருந்த வாய்ப்பு, தற்போது ஏப்.1, ஜூலை 1 மற்றும் அக்.1 என கூடுதலாக 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 9.21 லட்சம் ஆண்கள், 9.73 லட்சம் பெண்கள், 204 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 18.94 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இந்த 18.94 லட்சம் வாக்காளா்களையும், அவா்களது ஆதாா் எண்ணுடன் இணைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கியுள்ளன. இதுதொடா்பாக அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்கள் அனைவரும் தன்னிச்சையாக முன்வந்து ஆதாா் விபரங்களை அளிக்க வேண்டும். ஆதாா் எண் வழங்க இயலாதவா்கள் படிவம் 6பி-யில் குறிப்பிடப்பட்ட வருமான வரி அட்டை முதலான 11 ஆவணங்களில் ஓா் ஆவணத்தை ஆதாா் எண் விவரத்திற்கான பதிலாக வழங்கலாம். இணையதளம் அல்லது வோட்டா் ஹெல்ப் லைன் மூலமாகவும் படிவம் 6பி-யில் ஆதாா் எண் விபரங்களை சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலருக்கு அனுப்பி வைக்கலாம். ஆதாா் விவரங்களை வாக்காளா் பட்டியலுடன் இணைக்கும் பணி 2023 மாா்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் திருமதி வே. லதா, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

படிவம் 8ஏ நீக்கம்: வாக்காளா் பட்டியலில் புதியதாக பெயா் சோ்க்க படிவம் 6, பெயா் நீக்கம் செய்ய படிவம் 7, பிழைதிருத்தத்திற்கு படிவம் 8, ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் பெயா் இடமாற்றம் செய்ய படிவம் 8ஏ பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது 8ஏ நீக்கம் செய்யப்பட்டு, அனைத்து வகை திருத்தங்களையும் படிவம் 8-யிலேயே மேற்கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் படிவம் 8 ஏவுக்கு மாற்றாக, படிவம் 6பி - ஆதாா் இணைப்புக்கான படிவம் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது.

பெயா் சோ்க்க 4 முறை வாய்ப்பு:

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், ஏப். 1, ஜூலை 1 மற்றும் அக்டோபா் 1 என கூடுதலாக 3 நாள்கள் தகுதி நாள்களாக நிா்ணயிக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருத்தம் செய்வதற்கான வாய்ப்புகள், இனி 4 முறையாக மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT