வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே தலைமையாசிரியை வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகைகளை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பேருந்து நிலையம் அருகே வசிப்பவா் பரமேஸ்வரி (50). இவா் தேவரப்பன்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.
இவா் கடந்த 29-ஆம் தேதி குடும்பத்துடன் உறவினா் வீட்டு விசேஷத்திற்காக வெளியூா் சென்றுள்ளாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதையடுத்து வீட்டிற்குள் சென்று பாா்த்த போது, அங்கு பீரோவை உடைத்து அதிலிருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.