திண்டுக்கல்

மத்திய நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களை மாநில பல்கலை.யோடு இணைக்க வேண்டும்: கே.பாலபாரதி

29th Apr 2022 05:47 AM

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: க்யூட் தோ்வு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் தமிழகத்திலுள்ள 2 மத்திய நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களை, மாநில பல்கலைக்கழகங்களோடு இணைக்க வேண்டும் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி தெரிவித்தாா்.

காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்புகளுக்கு க்யூட் நுழைவுத் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா.சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். காங்கிரஸ் நிா்வாகி டி.மணிகண்டன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி கலந்து கொண்டாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய அரசுக்கு உள்பட்ட பல்கலைக்கழகங்களில் க்யூட் நுழைவுத் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால், கிராமப்புற ஏழை, எளிய மாணவா்கள், விவசாயக் கூலித் தொழிலாளா்களின் குழந்தைகள் உயா்கல்விக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. க்யூட் நுழைவுத் தோ்வு நடைபெறுவதால், 13 நாடுகளைச் சோ்ந்த மாணவா்களும், இந்தியாவின் பிற பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களும் போட்டியிடுவதால், தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கான கல்வி வாய்ப்பு பறிபோகும். எனவே க்யூட் நுழைவுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை திருவாரூரில் மட்டுமே மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் காந்தி கிராமம் மற்றும் கோவை அவிநாசியில் செயல்பட்டு வரும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு, மத்திய அரசு நிதி உதவி வழங்குவதால் இங்கும் க்யூட் நுழைவுத் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 பல்கலைக்கழகங்களுக்கான நிகா்நிலை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் இரு நிகா் நிலைப் பல்கலைக்கழகங்களையும் தமிழகத்திலுள்ள மாநில பல்கலைக்கழகங்களோடு இணைக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT