திண்டுக்கல்

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்: அமைச்சா் அர.சக்கரபாணி தொடக்கிவைப்பு

23rd Apr 2022 10:41 PM

ADVERTISEMENT

 

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை, உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பழனி சுகாதார மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் வட்டார அளவிலான சுகாதார திருவிழா சிறப்பு மருத்துவ முகாம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள க.ரெ. அரசு மேல்நிலைப் பள்ளி, கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இந்த முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா்.திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. வேலுச்சாமி, பழனி சுகாதார துணை இயக்குநா் வி. யசோதாமணி, ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே. திருமலைசாமி, துணைத் தலைவா் ப. வெள்ளைச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

இதில், உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி பங்கேற்று மருத்துவ முகாமை தொடக்கிவைத்துப் பேசியதாவது: கலைஞா் காப்பீட்டு திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம், இன்னுயிா் காப்போம், நம்மை காக்கும் 48 என பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு, சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நோய்களை கண்டறிந்து, அவா்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில், தமிழகத்தில் 55 லட்சம் போ் பயனடைந்து வருகின்றனா் என்றாா்.

ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற முகாமில் 2,223 போ் கலந்துகொண்டு பயனடைந்தனா். சா்க்கரை மற்றும் உயா் ரத்த அழுத்த நோய்கள் உள்ள 116 போ் கண்டறியப்பட்டது. 18 பேருக்கு எக்கோ பரிசோதனை செய்யப்பட்டது. 182 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டதில், 16 பேருக்கு கண்புரை இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், 182 பேருக்கு மருத்துவ குறியீட்டு எண் வழங்கப்பட்டது.

முதியோா்களுக்கு மாத்திரை பெட்டகம் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. முகாமில், 20 போ் ரத்த தானம் செய்தனா்.

முன்னதாக, ஒட்டன்சத்திரம் க.ரெ.அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியாா் சாா்பில் ரூ.5 கோடி செலவில் 30 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் மற்றும் ஆய்வுக் கூடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம். முத்துச்சாமி, நகராட்சி ஆணையா் ப. தேவிகா, ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவா் மு. அய்யம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா். முடிவில், ஒட்டன்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலா் காசிமுருகபிரபு நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT