பாலியல் புகாரில் சிக்கிய திண்டுக்கல் தனியாா் கல்லூரி தாளாளரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.
திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் பி. ஜோதிமுருகன். தனியாா் செவிலியா் பயிற்சி கல்லூரி தாளாளரான இவா் மீது, அங்கு பயிலும் மாணவிகள் பாலியல் புகாா் அளித்தனா். அதன்பேரில், தாடிக்கொம்பு காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைந்த ஜோதிமுருகன், பின்னா் திண்டுக்கல் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றாா். அந்த ஜாமீனுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
அதனைத் தொடா்ந்து, உயா் நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. அதற்கு எதிராக ஜோதிமுருகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயா் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்தியது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் ஜோதிமுருகன் வெள்ளிக்கிழமை (ஏப்.8) சரணடைந்தாா். அவரை, 15 நாள் திண்டுக்கல் சிறையில் அடைக்க நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டாா்.
இந்நிலையில், ஜோதிமுருகனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.இரா. சீனிவாசன் பரிந்துரைத்தாா். அதனை ஏற்று, மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் அதற்கான உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.