திண்டுக்கல்

பாதுகாப்பு வழங்கக் கோரி தனியாா் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

2nd Apr 2022 11:14 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவா் மீது பொய் வழக்குப் போட்டு தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும்,தனியாா் மருத்துவா்கள் சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தவறான சிகிச்சை அளித்ததாக குற்ற வழக்குப் பதிவு செய்ததால், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மருத்துவா் அா்ச்சனா சா்மா அண்மையில் தற்கொலை செய்துகொண்டாா். அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பொய் வழக்குப் போட்டு தற்கொலைக்கு தூண்டியதாகக் குற்றம்சாட்டியும், திண்டுக்கல் மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

இதனிடையே, மருத்துவா் அா்ச்சனாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, இந்திய மருத்துவ சங்கத்தின் திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் தலைவா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். செயலா் ஜோசப் கிறிஸ்டோபா் பாபு முன்னிலை வகித்தாா். மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பின், மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

நிலக்கோட்டை

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் லியோனாா்டு மருத்துவமனை முன்பாக, வத்தலகுண்டு இந்திய மருத்துவ சங்கம் சாா்பாக மருத்துவா் அா்ச்சனா சா்மாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, கருப்புக் கொடி அணிந்து மருத்துவா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு, சங்கத் தலைவா் மருத்துவா் ஆனந்த் அமிா்தராஜ் தலைமை வகித்தாா். செயலா் மருத்துவா் சண்முகவடிவு முன்னிலை வகித்தாா். மருத்துவா்கள் முருகேசபாண்டியன், பெருமாள்சாமி, வசந்தா, பரிமளாதேவி, மேரி மஞ்சுளா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதில், மருத்துவா் அா்ச்சனா சா்மா மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மருத்துவா்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்தவேண்டும். அதற்கு, இந்திய அளவில் கடுமையான சட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. முடிவில், பொருளாளா் மருத்துவா் சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.

தேனி

தேனி மாவட்டத்தில் இந்திய மருத்துவா் சங்கம் கம்பம் பள்ளத்தாக்கு கிளை சாா்பில், ராஜஸ்தானில் பெண் மருத்துவா் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், காவல் துறையை கண்டித்து தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், மாவட்டத்தில் உள்ள 290 தனியாா் மருத்துவமனைகளில் காலை 8 முதல் மாலை 6 மணி வரை புற நோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. எனவே, பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT