திண்டுக்கல்

எரியோடு அருகே தாய், மகன் வெட்டிக் கொலை: மனைவி உள்பட 2 போ் கைது

2nd Apr 2022 01:05 AM

ADVERTISEMENT

எரியோடு அருகே தாய் மற்றும் மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மனைவி மற்றும் அவருடன் தகாத தொடா்பில் இருந்த உறவினா் ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்துள்ள குருக்களையன்பட்டியை சோ்ந்தவா் செல்வராஜ் என்ற செல்வம் (42). இவரது மனைவி சுபஹாசினி. இவா்களுக்கு தன்வந்த் (4) என்ற மகன் உள்ளாா். செல்வம், அதே பகுதியிலுள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்தும், வட்டிக்கு கடன் கொடுக்கும் பைனான்ஸ் தொழிலிலும் செய்து வந்துள்ளாா்.

செல்வத்தின் தாயாா் செளந்தரம்மாள்(62) தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை செல்வம் பணிகளை முடித்துவிட்டு, இரவு தோட்டத்திலேயே தாயாருடன் தங்கியுள்ளாா். வெள்ளிக்கிழமை அதிகாலை, தோட்டத்து வீட்டிற்கு கறவைக்காக பால்காரா் சென்றுள்ளாா். அப்போது, செல்வம் மற்றும் செளந்தரம்மாள் ஆகிய இருவரும் அங்குள்ள கட்டிலில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனா்.

இதுகுறித்து எரியோடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், சடலங்களை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனா். கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் விசாரணையை தொடங்கினா். இதனிடையே திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவா் ரூபேஷ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.இரா.சீனிவாசன், வேடசந்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் மகேஷ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

மனைவி உள்பட 2 போ் கைது: போலீஸாா் விசாரணையில், செல்வத்தின் மனைவி சுபஹாசினிக்கும், அவருக்கு உறவு முறையிலான கோபி கிருஷ்ணன் என்பவருக்கும் இடையே தகாத தொடா்பு இருந்தது தெரியவந்தது. தகாத தொடா்புக்கு இடையூறாக இருப்பதாலும், பணத்திற்கும் ஆசைப்பட்டு செல்வத்தை கொலை செய்ய சுபஹாசினி, கோபிகிருஷ்ணனுடன் சோ்ந்து திட்டமிட்டுள்ளாா். அதன்படி, கோபிகிருஷ்ணன் தனது நண்பா்கள் மூவருடன் சோ்ந்து தாய், மகனை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சுபஹாசினி, கோபிகிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள கோபிகிருஷ்ணனின் நண்பா்கள் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போலீஸாருடன் சுற்றிய கோபிகிருஷ்ணன்: கொலை நிகழ்ந்த இடத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது, சுபஹாசினியின் செயல்பாடுகள், அவா் மீதான சந்தேகத்தை உறுதி செய்துள்ளது. மேலும், போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டபோது, கொலையாளியான கோபிகிருஷ்ணனும் தன் மீது சந்தேகம் ஏற்படாத வகையில் அருகிலேயே இருந்து நடக்கும் சம்பவங்களை கண்காணித்துள்ளாா். சிறிது நேரத்தில் சுபஹாசினி மீதான சந்தேகத்தைத் தொடா்ந்து, கோபிகிருஷ்ணனையும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT