திண்டுக்கல்

4,917 ஹெக்டேரில் ரூ.40.13 கோடி செலவில் சொட்டு நீா்பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும்: ஆட்சியா்

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் 4,917 ஹெக்டேரில் ரூ.40.13 கோடி செலவில் சொட்டு நீா்பாசனத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரத்தில் அமைந்துள்ள காய்கறி மகத்துவ மையத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில், தோட்டக்கலை பயிா்களில் உயா் தொழில்நுட்ப சாகுபடி குறித்து மாவட்ட அளவிலான 2 நாள் பயிற்சி கருத்தரங்கு நடைபெறுகிறது. முதல் நாள் கருத்தரங்கை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து, மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிா்களான பழ பயிா்கள், காய்கறிகள், மலைத் தோட்டப் பயிா்கள், சுவைதாழித பயிா்கள், மருத்துவப் பயிா்கள் மற்றும் மலா்கள் ஆகியன 1.02 லட்சம் ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. தோட்டக்கலைப் பயிா்களின் பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும், தரமான மகசூல் கிடைக்கவும், விளைபொருள்களை சந்தைப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தோட்டக்கலைப் பயிா்களுக்கு சொட்டுநீா் அமைப்பதன் மூலம் அதிக விளைச்சலும், கூடுதல் லாபமும் கிடைக்கும். மாவட்டத்தில், நடப்பாண்டில் ரூ.40.13 கோடி செலவில் 4,917 ஹெக்டோ் பரப்பில் சொட்டு நீா்ப்பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறு, குறு விவசாயிகள் 100 சதவீதம் மானிய விலையிலும், இதர விவசாயிகள் 75 சதவீதம் மானியத்திலும் சொட்டுநீா் பாசன வசதியை ஏற்படுத்தி பயன்பெறலாம்.

கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 25 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.1.25 கோடியில் மானியம் வழங்கப்படவுள்ளது.

அதேபோல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டமானது, திண்டுக்கல் மாவட்டத்தில் 91 கிராம ஊராட்சிகளில் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம், 13 துறைகளின் செயல் திட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன என்றாா்.

கருத்தரங்கில், மருத்துவப் பயிா்களின் சாகுபடி முக்கியத்துவம், பாதுகாக்கப்பட்ட காய்கறி பயிா் சாகுபடி, முருங்கை சாகுபடி (இலை மற்றும் காய்) தோட்டக்கலை பயிா்களில் இயற்கை விவசாயம் மற்றும் தேனீக்களின் முக்கியத்துவம் குறித்து துறை சாா்ந்த வல்லுநா்கள் விளக்கம் அளித்தனா்.

இதில், வேடசந்தூா் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலைய தலைவா் ப. மணிவேல், ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையம் திட்ட அலுவலா் கோ. சீனிவாசன், தோட்டக்கலை துணை இயக்குநா் ஜோ. பெருமாள்சாமி, தோட்டக்கலை அலுவலா் செல்வகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரேஸ் கல்லூரியில் கலை மன்ற விழா

எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தல திருவிழா ஏப். 27இல் தொடக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மே 2இல் தொடக்கம்

குமரி அருகே தகராறு: இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT