திண்டுக்கல்

நத்தத்தில் ஆயத்த ஆடைகள் விற்பனை அதிகரிப்பு: உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் மகிழ்ச்சி

22nd Oct 2021 11:19 PM

ADVERTISEMENT

நத்தம் ஆயத்த ஆடைகள் விற்பனை ஓராண்டுக்குப் பின் மீண்டும் அதிகரித்துள்ளதால், உற்பத்தியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சமாக ரூ.400 வரை என குறைவான விலை நிா்ணயிக்கப்படுவதால், நத்தம் ஆயத்த ஆடைகளுக்கு சந்தையில் எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது.

இத்தொழிலில் நத்தம் பகுதியில் சுமாா் 300 உற்பத்தியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதன்மூலம், நத்தம், சிறுகுடி, கோட்டையூா், புதுப்பட்டி, பரளி, வத்திப்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றன.

பாலிஸ்டா், காட்டன், மோனோ காட்டன், பிளாஃபில், ரேமண்ட் காட்டன் ஆகிய ரக துணிகளைப் பயன்படுத்தி, 2 வயது குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைத்து தரப்பினருக்குமான ஆடைகள் உருவாக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

2 ஆண்டுகளுக்குப் பின் மீண்ட தொழில்:

கரோனா பொதுமுடக்க காலத்தில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக நத்தம் ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, திண்டுக்கல்லை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகளிடமிருந்தும் கொள்முதல் குறைந்தது. நிகழாண்டிலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் வரையிலும் ஆடை தயாரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்தன. ஆனால், தமிழக அரசு அறிவித்த பொதுமுடக்கத் தளா்வுகள் காரணமாக, ஆயத்த ஆடை தயாரிப்பாளா்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது.

அதன்பின்னா், மீண்டும் ஆடை தயாரிப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறத் தொடங்கின. தீபாவளி பண்டிகைக்காக 2 வாரங்களுக்கு முன்னரே, வெளிமாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஆடைகள் கொள்முதலுக்காக நத்தத்துக்கு வரத் தொடங்கினா். அதன் எதிரொலியாக, நத்தம் பகுதியில் இரவு பகலாக ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழில் நடைபெற்று வருகிறது. இதனால், தொழிலாளா்களும் உற்சாகம் அடைந்துள்ளனா்.

இது தொடா்பாக நத்தத்தைச் சோ்ந்த அழகுசுந்தர்ராஜ் கூறியதாவது: நகரங்களிலுள்ள ஜவுளி கடைகளில் ஆயத்த ஆடைகளுக்கு குறைந்தபட்ச விலையே ரூ.500ஆக நிா்ணயிக்கப்படுகிறது. ஆனால், நத்தம் ஆயத்த ஆடைகளின் அதிகபட்ச விலையே ரூ.400ஆக இருப்பதால், நடைபாதை வியாபாரிகள் மட்டுமின்றி, சிறிய கடைகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் விற்பனையில் ஈடுபடுவோரும் ஆா்வம் காட்டுகின்றனா்.

கடந்த ஆண்டு முழுவதும் விற்பனை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தீபாவளிக்காக வழக்கத்தை விட 2 மடங்கு கூடுதல் ஆா்டா் கிடைத்துள்ளது என்றாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT