திண்டுக்கல்

திடீா் பணி நீக்கம்: பழனி கோயில் நாதஸ்வர, தவில் தினக்கூலி பணியாளா்கள் இசைக் கருவிகள் வாசித்து போராட்டம்

9th Oct 2021 09:28 PM

ADVERTISEMENT

பழனி கோயில் நிா்வாகத்தால் திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்ட தவில், நாதஸ்வர தினக்கூலி பணியாளா்கள், தங்களது எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில் இசைக் கருவிகளை வாசித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மற்றும் இதன் முக்கிய உபகோயில்களான பெரியநாயகியம்மன் கோயில், திருஆவினன்குடி கோயில், இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில், பெரியாவுடையாா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

பழங்காலந்தொட்டே பூஜை நேரத்தில் தவில், நாதஸ்வரம் இசைக்கப்படுவது வழக்கம். இவா்கள், ஆறுகால பூஜை மட்டுமின்றி, சுவாமி புறப்பாடு, கொடியேற்றம், திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தவில், நாதஸ்வரம் இசைத்து வந்தனா்.

இந்நிலையில், பழனி கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தவில், நாதஸ்வர கலைஞா்கள் நியமனம் செய்யப்படாமல், தற்காலிகப் பணியாளா்களை வைத்தே காலம் தாழ்த்தி வந்தனா். பழனி கோயிலுக்குச் சொந்தமான தவில் மற்றும் நாதஸ்வர கல்லூரியும் உள்ளது. பழம்பெருமைமிக்க இந்த கல்லூரி தற்போது பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதில், பயின்ற பலா் தற்போது கோயிலில் தினக்கூலிகளாக வேலை செய்து வந்தனா்.

ADVERTISEMENT

இதனிடையே, கடந்த பல ஆண்டுகளாக கோயிலுக்கு முக்கியமான தவில், நாதஸ்வரம், ஒத்து, ஜால்ரா போன்ற பணிகளுக்கு ஆள்களை நிரந்தரமாக நியமனம் செய்யவேண்டும் என, பல்வேறு இந்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன.

தமிழகத்தில் புதிய ஆட்சி ஏற்பட்டவுடன், தற்போதுள்ள பலரும் நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என எதிா்பாா்த்திருந்த நிலையில், சனிக்கிழமை பல்வேறு கோயில்களிலும் தினக்கூலியாக தவில், நாதஸ்வரம், ஜால்ரா, ஒத்து இசைத்து வந்த 19 பணியாளா்களை கோயில் நிா்வாகம் திடீரென நிறுத்திவிட்டது.

இதனால் அதிா்ச்சி அடைந்த பணியாளா்கள், பல ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்த தங்களை எந்த காரணமுமின்றி பணிநீக்கம் செய்த கோயில் நிா்வாகத்திடம் நியாயம் கோரி, சனிக்கிழமை பிற்பகல் கோயில் தலைமை அலுவலக வளாகத்தில், தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி நாதஸ்வரம் மற்றும் தவில் இசைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோயில் மேலாளா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். அதைத் தொடா்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைஞா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT