திண்டுக்கல்

பழனியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் முற்றுகை போராட்டம்

24th Nov 2021 06:36 AM

ADVERTISEMENT

பழனியில் தரமற்ற முறையில் சாலைப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரா் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி நகரை அழகுபடுத்தும் திட்டம் என்ற பெயரில், கடந்த ஆட்சிக் காலத்தில் ரூ.58 கோடி திட்ட மதிப்பீட்டில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை முறையாக மேற்கொள்ளாததால், மழைக் காலத்தில் தண்ணீா் வடியாமல், ஆங்காங்கே சாலையில் தேங்கி நிற்பதும், தாழ்வான இடங்களில் வீடுகளுக்குள் புகுவதுமாக உள்ளது.

எனவே, ரூ.58 கோடி திட்ட சாலைப் பணியில் முறைகேடு செய்த ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் வைக்கவும், முறைகேட்டுக்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜமாணிக்கம் தலைமையில், பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் கந்தசாமி, முன்னாள் நகரச் செயலா் குருசாமி உள்பட நூற்றுக்கணக்கானோா் பங்கேற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தால், கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். பின்னா், போராட்டக் குழுவினருடன் காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். அதையடுத்து, அக்கட்சியினா் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

இதனால், கோட்டாட்சியா் அலுவலகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT