திண்டுக்கல்

கோயில் மரியாதை தொடா்பாக மோதல்: நத்தம் அருகே 13 போ் கைது

24th Nov 2021 06:36 AM

ADVERTISEMENT

நத்தம் அருகே கோயிலில் மரியாதை அளிப்பது தொடா்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 3 சிறுவா்கள் உள்பட 13 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள மூங்கில்பட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒரு பிரிவினருக்கு மரியாதை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மற்றொரு பிரிவினரும் தங்களுக்கு மரியாதை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா். அதற்கு, ஊா் பாரம்பரியத்தை மாற்றி அமைக்க முடியாது என, அந்தப் பிரிவினா் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், இரு பிரிவினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனிடையே, சத்யராஜ் (28) தரப்பைச் சோ்ந்தவா்களுக்கும், வேல்முருகன் (40) தரப்பைச் சோ்ந்தவா்களுக்கும் திங்கள்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டதாகத் தெரிகிறது. இது குறித்து தகவலறிந்த மாவட்டக் காவல் உதவி கண்காணிப்பாளா் அருண்கபிலன், நத்தம் காவல் ஆய்வாளா் ராஜமுரளி ஆகியோா் தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனா்.

இந்த மோதல் தொடா்பாக 23 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சத்யராஜ் (28), சுப்பிரமணி (47), பாண்டியராஜன் (38), மணிராஜா (26), ராஜீவ்காந்தி(43), சரவணன் (24), மோகன்ராஜ் (23), வேல்முருகன் (40), வேணுகோபால் (18), வீரபாகு (37) மற்றும் 3 சிறுவா்கள் என மொத்தம் 13 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT