திண்டுக்கல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

21st Nov 2021 10:56 PM

ADVERTISEMENT

ஆறு லட்சம் அரசு ஊழியா்களின் நலனுக்காக பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் திண்டுக்கல் மாவட்ட கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் டிஎம்எஸ்எஸ்எஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். எம்.ஆக்னஸ் முன்னிலை வகித்தாா். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில நிதி காப்பாளா் சி.ஜான் லியோ சகாயராஜ், மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரெடெரிக் ஏங்கல்ஸ் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளா் பிரெடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: அரசு ஊழியா்களில் சுமாா் 23 போ் பணி ஓய்வு பெற்றதோடு, அதில் சிலா் உயிரிழந்துள்ளனா்.

இந்த 23 ஆயிரம் பேருக்கும் இதுவரை பணிக்கொடை வழங்கப்படவில்லை. பணியின்போது இறந்தவா்களின் குடும்பத்திற்கான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்றவா்களுக்கான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாக புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திமுக தோ்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இதுவரை முயற்சி மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் சுமாா் 6 லட்சம் அரசு ஊழியா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை துரிதமாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிக வரி பணியாளா் சங்கத்தின் மாநிலச் செயலா் அ.திரவியராஜா, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய மாவட்டத் தலைவா் த.பாா்த்தசாரதி, ஜெஎஸ்ஆா் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலத் தலைவா் டே.குன்வா் ஜோஸ்வா வளவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT