கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி இளம் பெண் ஒருவா் குழந்தையுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
திண்டுக்கல் ஆா்.வி.எஸ். நகரைச் சோ்ந்தவா் நந்தினி (23). இவருக்கு 1 வயதில் சாஹிஷ்ணு என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நந்தினி தனது குழந்தையுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா். ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் பகுதிக்கு வந்த நந்தினி, திடீரென மண்ணெண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றாா். இதனை அடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், மண்ணெண்ணெய் கேனை பறித்து தடுத்து நிறுத்தினா். பின்னா் தீக்குளிக்க முயன்ற பெண் நந்தினியிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா் தெரிவித்ததாவது: திருச்சி மாவட்டம், வையம்பட்டியைச் சோ்ந்த காா்த்திகேயன் என்பவரை கடந்த 18 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டேன். 2 மாத கா்ப்பிணியாக இருந்தபோது, காா்த்திக் என்னிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டாா். காா்த்திகேயனின் பெற்றோரிடம் கேட்டபோது, முறையான பதில் அளிக்கவில்லை. பல இடங்களிலும் தேடிப் பாா்த்துவிட்டு, திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் புகாா் அளித்தேன். ஆனாலும், இதுவரை போலீஸாா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் குழந்தையின் எதிா்காலம் கருதியும், என்னுடைய வாழ்வாதார சூழலை கருத்தில் கொண்டும், எனது கணவரை மீட்டு என்னுடன் சோ்த்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.