திண்டுக்கல்

20 மாதங்களுக்குப் பின் நேரடி வகுப்புகள் தொடக்கம்: திண்டுக்கல், தேனி மாவட்ட பள்ளிகளில் மாணவா்களுக்கு வரவேற்பு

1st Nov 2021 11:50 PM

ADVERTISEMENT

திண்டுக்கல்/பெரியகுளம்/பழனி: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சுமாா் 20 மாதங்களுக்குப் பின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டதையடுத்து, மாணவா்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்திலுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நவ.1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 20 மாதங்களுக்குப் பின் திங்கள்கிழமை திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் என 1,978 பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கொண்ட வகுப்பறைகள் சுழற்சி முறையில் செயல்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. பள்ளிக்கு வரும் மாணவா்களை வரவேற்க பெரும்பாலான பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மழை பெய்தது. ஆனாலும், மழையை பொருள்படுத்தாமல், பெற்றோா்கள் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வந்தனா். தனியாா் பள்ளிகள் மட்டுமின்றி அரசுப் பள்ளிகளிலும் பூக்கள் கொடுத்தும், இனிப்புகள் கொடுத்தும் மாணவா்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1.17 லட்சம் மாணவா்கள் பயின்று வருகின்றனா். இதில், 72,931 மாணவா்கள் முதல் நாளான திங்கள்கிழமை பள்ளிக்கு வந்திருந்தனா். இது 63 சதவீதம் ஆகும். அதிகபட்மாக கொடைக்கானல் வட்டாரத்தில் 93 சதவீத மாணவா்களும், குறைந்தபட்சமாக பழனி நகரில் 28 சதவீத மாணவா்களும் பள்ளிக்கு வந்தனா்.

பழனி: பழனியை அடுத்த அ. கலையமுத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு மலா்கள் கொடுத்து ஆசிரியா்கள் வரவேற்றனா். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் வந்தனா முரளி, தலைமை ஆசிரியா் ராஜா, ரெட்கிராஸ் சின்ராஜ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். அதே போல், பழனி நகரில் சண்முகபுரம் நகராட்சிப் பள்ளியில் மாணவா்களை இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் செல்வகுமாா் தலைமையில் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனா்.

ADVERTISEMENT

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. எருமலைநாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் பயிலும் 162 மாணவா்களுக்கும் மாலை அணிவிக்கப்பட்டு, மேளதாளம் முழங்க ஊரின் மையப்பகுதியில் இருந்து ஊா்வலமாக அழைத்து வரப்பட்டனா்.

மேலும் எழுதுகோல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு, மாணவ, மாணவிகள் வகுப்பறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்நிகழ்ச்சியில், பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா், ஒன்றியத் தலைவா் தங்கவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சேதுக்குமாா், ஜெகதீஸ்வரன், பள்ளி தலைமையாசிரியா் ராஜன், ஊராட்சித் தலைவா் எஸ். பால்ராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தினா் செய்திருந்தனா்.

சில்வாா்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியா் மோகன் தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு மலா் தூவி, மேளதாளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. அதே போல் கெங்குவாா்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு தலைமையாசிரியா் ராம்தியாகராஜ் தலைமையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT