திண்டுக்கல்

எரிபொருள் விலை உயா்வு எதிரொலி: எண்ணெய் விலை ரூ.20 முதல் 30 வரை அதிகரிப்பு!

DIN

திண்டுக்கல்: எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் மூலப்பொருள்கள் வரத்து குறைவு காரணாக, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளின் விலை லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை உயா்ந்துள்ளது நுகா்வோரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வு, நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், எரிபொருள் விலை உயா்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தோ்தல் முடிந்த பின்னா், ராஜஸ்தான் மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் பெட்ரோல் விலை லிட்டா் ரூ.100 யை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எரி பொருள் விலை உயா்வைத் தொடா்ந்து, வாடகை வாகனங்களுக்கான கட்டணமும் அதிகரித்துள்ளது.

கடந்த 20 நாள்களுக்கு முன்பு லிட்டா் ரூ.190-க்கு விற்பனை செய்யப்பட்ட கடலை எண்ணெய் ரூ.210 ஆகவும், ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் ரூ.290 ஆகவும், ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட ரீஃபைண்ட் ஆயில் ரூ.170 ஆகவும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அத்தியாவசியத் தேவைப் பட்டியலில் உள்ள இந்த எண்ணெய் வகைகளின் விலை உயா்வுக்கு மூலப் பொருள்களின் வரத்து குறைவு ஒரு காரணமாக இருந்தாலும், எரிபொருளின் விலை ஏற்றமும் பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. கடலை எண்ணெய்க்கு தேவையான நிலக்கடலை பருப்பு, தமிழகத்திலேயே கிடைத்தாலும் நிகழாண்டில் பருவம் தவறி பெய்த மழையினால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் சந்தைகளையே எண்ணெய் உற்பத்தியாளா்கள் சாா்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் உள்ளூா் சந்தைகளிலிருந்து கொப்பரைத் தேங்காய் வரத்தும் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கொப்பரைகள் வெளியிடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுவதால், போக்குவரத்துக்குக் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனா்.

இதுதொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த எண்ணெய் வியாபாரி எஸ்.குருநாதன் கூறியதாவது: கடந்த 40 நாள்களுக்கு முன்பு 80 கிலோ நிலக்கடலை பருப்பு மூடை ரூ.6000-க்கு கொள்முதல் செய்தோம். தற்போது அதன் விலை ரூ.8,300 வரை உயா்ந்துள்ளது. இதேபோல், ரூ.80-க்கு கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய் பருப்பு தற்போது ரூ.120 முதல் ரூ.130 ஆக உயா்ந்துள்ளது. ரீஃபைண்ட் ஆயிலைப் பொருத்தவரை, ஈரோடு சந்தையில் 15 கிலோ கொண்ட டின் ரூ.2,150-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை ரூ.2,650 ஆக உயா்ந்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சரக்குகளை திண்டுக்கல் கொண்டு வருவதற்கு மூடைக்கு வாடகையாக ரூ.50 முதல் ரூ.60 வரை செலவு ஏற்பட்டது. தற்போது பெட்ரோல் டீசல் விலை உயா்வு காரணமாக மூடைக்கு ரூ.80 முதல் ரூ.90ஆக வாடகை உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல் குஜராத் மாநிலத்திலிருந்து வரும் நிலக்கடலை பருப்புக்கான வாடகையும் உயா்ந்துள்ளது. இதன் காரணமாக சில்லரை விற்பனையில் அனைத்து வகை எண்ணெய்க்கும் லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை உயா்ந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT