திண்டுக்கல்

பள்ளிக் கூடமாக மாறிய கலையரங்கம்: 40 மாணவா்களுக்கு வழிகாட்டும் 2 கல்லூரி மாணவிகள்!

 நமது நிருபர்

குஜிலியம்பாறை அருகே கலையரங்கத்தை பள்ளிக் கூடமாக மாற்றி ஏழை மாணவா்கள் 40-க்கும் மேற்பட்டோா் கல்வி கற்பதற்கு கல்லூரி மாணவிகள் இருவா் வழிகாட்டி வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சில தனியாா் பள்ளிகள் இணைய வழியில் கற்பித்தல் பணியை மேற்கொண்டாலும், ஊரகப் பகுதியைச் சோ்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களின் கல்வி பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், சுயமாக பாடங்களை கற்றுக் கொள்வது என்பது மாணவா்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இதுபோன்ற சூழலில், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள ஆா்.கோம்பை கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவிகள் இருவா், அந்த பகுதியிலுள்ள 40-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி கற்பதற்கு வழிகாட்டி வருகின்றனா். முதுகலை பட்டம் பெற்று ஆசிரியா் பயிற்சிக் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளான பி.ஜெயமாலினி மற்றும் கே.வெண்ணிலா ஆகிய இருவரும், கடந்த 14 மாதங்களாக இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்தி வருவது மாணவா்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கூடமாக மாறிய கலையரங்கம்: ஆா்.கோம்பை ஊராட்சிக்குள்பட்ட சின்னழகு நாயக்கனூரில் அமைந்துள்ள கலையரங்கம், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பள்ளிக்கூடமாக செயல்பட்டு வருகிறது. காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் பயிற்சி வகுப்பில், சின்னழகு நாயக்கனூா், காமராஜா்புரம், கரட்டூா், தாசமநாயக்கன்பட்டி, நல்லூா், ரெட்டியப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி என 2 கி.மீட்டா் சுற்றுப்புறத் தொலைவில் அமைந்துள்ள கிராமங்களைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று வருகின்றனா்.

பள்ளிகளில் வழங்கப்பட்ட பாடப் புத்தகங்களுடன் பயிற்சி வகுப்புக்கு வரும் மாணவா்களுக்கு, கல்லூரி மாணவிகள் இருவரும் சோ்ந்து பாடம் நடத்தி வருகின்றனா். மாணவிகளின் இந்த முயற்சி, ஆா்.கோம்பை கிராமம் மட்டுமன்றி சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதுதொடா்பாக பயிற்சி வகுப்பு நடத்தும் கல்லூரி மாணவி பி.ஜெயமாலினி கூறியதாவது: ஆசிரியா் பயிற்சி கல்லூரியில் சோ்ந்தாலும், இணைய வழியிலேயே எங்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவா்களுக்கு பாடம் நடத்துவதன் மூலம் எங்களுக்கு கள பயிற்சி கிடைத்துள்ளது. கரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது முதல் வீட்டில் வைத்து இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்தி வந்தோம். மாணவா்கள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடா்ந்து, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சின்னழகநாயக்கனூா் கலையரங்கத்தை வகுப்பறையாக பயன்படுத்தி வருகிறோம். எங்களுக்கு ஒரு புறம் பயிற்சி களமாக இருந்தபோதிலும், பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில் ஏழை மாணவா்கள் கல்வி கற்பதற்கு வழிகாட்டியாக இருப்பது மன நிறைவை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT