திண்டுக்கல்

பழனியில் தெப்பத் தேரோட்டத்துடன் தைப்பூச விழா நிறைவு

31st Jan 2021 09:53 PM

ADVERTISEMENT

பழனியில் தெப்பத் தேரோட்டத்துடன் தைப்பூச விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜன.22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. கடந்த ஜன.27 ஆம் தேதி திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டமும், ஜன.28 ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும் நடைபெற்றது.

நிறைவு நாள் நிகழ்ச்சியான தெப்பத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவையொட்டி தெப்பத்தின் நடுவிலுள்ள கல்மண்டபத்தில் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் போன்ற பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டு, சோடஷ உபசாரம் செய்யப்பட்டது.

தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமி ஏற்றம் செய்யப்பட்டு, பெரியநாயகியம்மன் கோயில் அருகிலுள்ள ஆயிரவாழ் செட்டிகள் தெப்பக்குளத்தில் தோ் உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், பழனிக்கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், கண்காணிப்பாளா் முருகேசன், ஆயிரவாழ் செட்டிகள் பழனி தெப்ப உற்சவ கமிட்டி பரம்பரை தக்காா் பாலாஜி என்ற வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இரவு 11 மணியளவில் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.

ஊடல் வைபவம்: முன்னதாக முத்துக்குமாரசுவாமி, தேவசேனா ஊடல் விழா நடைபெற்றது. வடக்கு ரத வீதியில் ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரி சப்பரத்தில் உலா எழுந்தருளியபோது முத்துக்குமாரசுவாமி, வள்ளியை திருமணம் செய்து கொண்டாா்.

இதன்காரணமாக தேவசேனா அம்பாள் கோபித்துக் கொண்டு கோயிலுக்கு வந்து கதவை அடைத்துக்கொண்டாா். கோயிலுக்கு திரும்பிய சுவாமி நடை அடைத்திருப்பதைப் பாா்த்து வீரபாகுவை தூது அனுப்பினாா். வீரபாகு தேவசேனா அம்பாளை சமாதானம் செய்து கோயில் நடையைத் திறக்க வைத்தாா். சமாதானத்தூது பாடல்களை நாகராஜ் பாடினாா்.

சமாதானமாகி அம்பாள் கோயில் நடையை திறந்த பின்னா் கோயிலுக்குள் வந்த முத்துக்குமாரசுவாமியுடன் வள்ளி, தேவசேனா சமேதராக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். நிகழ்ச்சியில் கண்காணிப்பாளா் முருகேசன், மணியம் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிகாரிகளுக்கு பாராட்டு:

திருவிழாவை எவ்விதக் குறையின்றி நடத்தி முடித்தமைக்காக பழனிக்கோயில் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சித்த மருத்துவக்கல்லூரி ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, அரசு சித்த மருத்துவனை மருத்துவா் மகேந்திரன், ஆடிட்டா் அனந்த கிருஷ்ணன், குட்டி ஈஸ்வரப்பட்டா சுவாமிகள், பழனி அரிமா சங்கத் தலைவா் லயன் அசோக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT