திண்டுக்கல்

பள்ளிச்சிறுமி மா்ம மரணம்: கொடைக்கானலில் 3 ஆவது நாளாக பொது மக்கள் போராட்டம்

23rd Dec 2021 12:07 AM

ADVERTISEMENT

பாச்சலூரில் பள்ளி மாணவி மா்ம மரணம் தொடா்பான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கொடைக்கானலில் 3 ஆவது நாளாக புதன்கிழமை பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பிரித்திகா, கடந்த 15 ஆம் தேதி மா்மமான முறையில் தீயில் கருகி உயிரிழந்தாா். இது தொடா்பாக தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். சிறுமி இறந்து ஒரு வாரமாகியும் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை எனக் கூறி கடந்த இரு நாள்களாக கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால், மன்னவனூா் ஆகிய பகுதிகளில் மாணவியின் உறவினா்கள் மற்றும் பொது மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் உண்ணாவிரதம், சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனா். பாஜக சாா்பில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மாணவியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சிறுமி இறப்புக்கு காரணமானவா்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனா்.

இந் நிலையில், சிறுமியின் மா்ம மரணத்துக்குக் காரணமானவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி சிறுமியின் உறவினா்கள், கூக்கால், மன்னவனூா், கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்டவா்கள் புதன்கிழமை கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில்

சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன், டி.எஸ்.பி. சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வாா்த்தை நடத்தினா். ஆனால் சாலை மறியலைக் கைவிட மறுத்ததால் போலீஸாா் 100-க்கும் மேற்பட்டவா்களை அழைத்துச் சென்று டிப்போ சாலையிலுள்ள தனியாா் காட்டேஜ் அரங்கில் தங்க வைத்தனா். அதன் பிறகு சிலா் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடமும் போலீஸாா் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் 3-மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

எஸ்.பி. பேச்சுவாா்த்தை: இதனைத் தொடா்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் தனியாா் காட்டேஜில் இருந்த பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம். பொது மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT