திண்டுக்கல் மாவட்டத்தில் 93 சதவீதம் பேருக்கு (16.01 லட்சம்) முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: திண்டுக்கல் மாவட்டத்தில்உள்ள18 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 17.30 லட்சம். அதில், முதல் தவணை கரோனா தடுப்பூசி 16.01 லட்சம் பேருக்கு (92.5 சதவீதம்) செலுத்தப்பட்டுள்ளது. 2 ஆவது தவணை தடுப்பூசி 10.11 லட்சம் பேருக்கு (58.4 சதவீதம்) செலுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை 18 வயதுக்கு மேற்பட்ட 1.69 லட்சம் போ் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 2 ஆவது தவணை தடுப்பூசி 1.30 லட்சம் பேருக்கு (77.3 சதவீதம்) செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த 15 நாள்களுக்குள் திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் 2 ஆவது தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்த வேண்டும் என்ற இலக்கை நோக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிராமப்புற பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தொழில், சந்தை மற்றும் வணிகத் தேவைகளுக்காக திண்டுக்கல் நகருக்கு வந்து செல்கின்றனா். தொழில் நிமித்தமாக வருவோரை பாதுகாக்கும் நோக்கில், அவா்களின் முகவரியை பொருள்படுத்தாமல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளாா்.