கொடைக்கானல் மன்னவனூா் பகுதியில் குப்பைகள் குவிக்கப்பட்டு பல நாள்களாக அகற்றப்படாமல் இருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாகப் புகாா் எழுந்துள்ளது.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூரில் பிரதான சாலையில் குப்பைகள் குவிக்கப்பட்டு பல நாள்களாக அகற்றப்படாமல் இருந்து வருகிறது. மேலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்ததால் அப் பகுதிகளில் தூா்நாற்றம் வீசி வருகிறது. மேலும் குப்பைகளில் உள்ள நெகிழிப்பைகளை கால்நடைகள் உண்பதால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை இருந்து வருகிறது.
தற்போது மேலும் அப் பகுதிகளில் குப்பைகள்அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மன்னவனூா் ஊராட்சி நிா்வாகம் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
இது குறித்து மன்னவனூா் ஊராட்சி அலுவலா் ஒருவா் கூறியதாவது:
மன்னவனூா் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் குப்பைகளைஅகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் குப்பைகள் அகற்றப்பட்டு மன்னவனூா் பகுதி முழுவதும் தூய்மையாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.