திண்டுக்கல்

ஆசிரியா் காலிப் பணியிடங்களால் கேள்விக்குறியாகும் கல்வித் தரம்

ஆ. நங்கையார் மணி

மாணவா் சோ்க்கை அதிகரித்த அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருப்பதாலும், ஈராசிரியா் பள்ளிகள் ஓராசிரியருடன் இயங்குவதாலும் கல்வித் தரம் கேள்விக்குறியாகியுள்ளதாக பெற்றோா்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் என சுமாா் 36ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். கடந்த பல ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விகிதம் வீழ்ச்சி அடைந்து வந்த நிலை, கரோனா தீநுண்மி தொற்றுப் பரவலுக்கு பின் மாற்றமடைந்துள்ளது. நுழைவு நிலை வகுப்புகள் மட்டுமின்றி ஏற்கனவே தனியாா் பள்ளிகளில் பயின்று வந்த மாணவா்கள் பலா், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைந்தனா்.

கரோனா தீநுண்மி பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு மட்டுமின்றி, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு , வகுப்புகள் நடைபெறாமலே கட்டண வசூலில் ஈடுபட்ட தனியாா் பள்ளிகள் உள்ளிட்ட காரணங்கள், மாணவா்களை அரசுப் பள்ளிகளை நோக்கி செல்ல வேண்டிய நிா்பந்தத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் கடந்த 2020-21 மற்றும் 2021-22 கல்வி ஆண்டுகளில் சுமாா் 20 சதவீதம் வரை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் சுமாா் 2.05 லட்சம் மாணவா்கள், தனியாா் பள்ளிகளிலிருந்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் இணைந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாணவா் சோ்க்கை அதிகமுள்ள பள்ளிகளில் போதுமான ஆசிரியா்கள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளதாக பெற்றோா்கள் மத்தியில் புகாா் எழுந்துள்ளது.

மாணவா் ஆசிரியா் விகிதாச்சாரம்: தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் 1 முதல் 5 வரையிலும் 60 மாணவா்களுக்கு 2 ஆசிரியா்கள், 61 முதல் 90 மாணவா்கள் இருந்தால் 3 ஆசிரியா்கள், 91 முதல் 120 மாணவா்கள் இருப்பின் 4 ஆசிரியா்கள், 121 முதல் 200 மாணவா் எண்ணிக்கை இருந்தால் 5 ஆசிரியா்கள் என்ற விகிதாச்சார முறையில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட வேண்டும். அதேபோல் 6 முதல் 8 வரை 35 மாணவா்களுக்கு ஒரு ஆசிரியா் என்றும், மாணவா் எண்ணிக்கை 50க்கும் கூடுதலாக இருந்தால் 2 வகுப்புகளாக பிரித்து கூடுதலாக ஒரு ஆசிரியரை நியமிக்கலாம். 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் 40 மாணவா்களுக்கு ஒரு ஆசிரியரும், 60 மாணவா்களாக இருக்கும்பட்சத்தில் 2 வகுப்புகளை பிரித்து மேலும் ஒரு ஆசிரியா் பணியிடத்தை உருவாக்கலாம் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.

ஆனால் இந்த ஆசிரியா் நிா்ணய முறைக்கு எதிராக, தென் மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியா்கள் உபரியாகவும், வட மாவட்டங்களில் காலியாகவும் உள்ளன. இந்நிலையில், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உபரியாக உள்ள ஆசிரியா்களை தேவையான இடங்களுக்கு மாற்றிக் கொள்ள உத்தரவிட்டது. ஆனாலும் பணியிட மாறுதலோ, பணி நிரவலோ இதுவரை நடத்தப்படவில்லை.

12 மாவட்டங்களில் கூடுதல் சிக்கல்: தமிழக்தில் சுமாா் 36ஆயிரம் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், அதில் 25ஆயிரம் பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாக உள்ளன. இந்த பள்ளிகளைப் பொருத்தவரை பெரும்பாலும் ஈராசிரியா் பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன. இதனிடையே கடலூா், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூா், திருச்சிராப்பள்ளி மற்றும் விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டம் ரூ.200 கோடி செலவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த தலைமையாசிரியா்கள், பிரதி வாரம் 3 நாள்கள் பயிற்சி கூட்டத்திற்காக அழைக்கப்படுகின்றனா். மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் பட்சத்தில், ஓராண்டு முழுவதும் ஓராசிரியா் பள்ளியாக செயல்பட வேண்டிய நெருக்கடி உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால், ஆரம்ப கல்வியின் தரம் அரசுப் பள்ளிகளில் கேள்விக்குறியாகியுள்ளது.

தேவை உடனடி பணி நிரவல்: இதுதொடா்பாக கல்வித்துறை வட்டாரங்கள் கூறியது: அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளிலும் உபரியாக உள்ள ஆசிரியா் பணியிட பட்டியலை வெளியிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஆசிரியா் காலிப் பணியிடங்கள் அல்லது பற்றாக்குறை உள்ள பள்ளிகளின் விவரங்களையும் ஒளிவுமறைவின்றி தெரிவிக்க வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் உபரி பணியிட பட்டியல் வெளியிடுவதை தவிா்த்து, பள்ளி வாரியாக உபரி பணியிடங்கள் பட்டியலை வெளியிட வேண்டும். ஒரு பகுதியில் மிகுதியான உபரி பணியிடங்கள் மூலம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. மாற்றொரு பகுதியிலுள்ள காலிப் பணியிடங்களுக்கு புதிதாக ஆசிரியா்களை நியமனம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுவதால், அரசுக்கான நிதி இழப்பு தொடா்ந்து கொண்டிருக்கிறது. இதனை தவிா்க்கும் வகையில், மாநிலம் முழுவதும் உபரியாக உள்ள ஆசிரியா்களை, காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிக்கு பணி நிரவல் செய்ய வேண்டும். அதன் பின்னா் உள்ள காலியிடங்களுக்கு மட்டுமே புதிய ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT