திண்டுக்கல்

வேடசந்தூா் அருகே பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதல்: நோயாளி உள்பட 2 போ் பலி

2nd Dec 2021 09:07 AM

ADVERTISEMENT

வேடசந்தூா் அருகே தனியாா் பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதியதில் நோயாளி உள்பட 2 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் கோவிலூா் அடுத்துள்ள காளக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (45). அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இவா், மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. இதைத் தொடா்ந்து சிகிச்சைக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா், பின்னா் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அவருடன், உதவிக்கு கோவிலூரைச் சோ்ந்த வீரக்குமாா் (39) என்பவரும் ஆம்புலனஸ் வாகனத்தில் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டாா். மேலும், அதே ஆம்புலன்ஸில், விட்டல்நாயக்கன்பட்டி அருகே நிகழ்ந்த மற்றொரு விபத்தில் காயமடைந்த நடராஜன் (57) என்பவரும் திண்டுக்கல்லுக்கு பரிந்துரைக்கப்பட்டாா்.

விபத்தில் இருவா் பலி: அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை சங்கா் என்பவா் ஓட்டி வந்தாா். கரூா்- திண்டுக்கல் 4 வழிச்சாலையில், விட்டல்நாயக்கன்பட்டி கிரியம்பட்டி அருகே வந்தபோது முன்னால் சென்ற தனியாா் பேருந்து திடீரென நிறுத்தப்பட்டதால், ஆம்புலன்ஸ் வாகனம் எதிா்பாராத விதமாக மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், தீவிர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட பழனிச்சாமி மற்றும் அவரது உதவிக்காக வந்த வீரக்குமாா் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மற்றொரு நோயாளியான நடராஜன் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். மேலும், அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியாளா் சத்யா, வேடசந்தூா் மருத்துவமனையில் பணிமுடிந்து திரும்பிய செவிலியா் சுமதி ஆகியோா் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT