திண்டுக்கல்

பெண் ஆசிரியரைக் கட்டிப் போட்டு 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை

1st Dec 2021 06:27 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் அருகே வீடுபுகுந்து பெண் ஆசிரியரைக் கட்டிப்போட்டு, 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை செவ்வாய்க்கிழமை கொள்ளையடித்துச் சென்ற 4 இளைஞா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனி ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் துரை. திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் இளநிலை அலுவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சுஜாதா (55). திண்டுக்கல்லில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா். இவா்களது வீட்டில், மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

துரை வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை காலை பணிக்கு சென்றுவிட்ட நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் சுஜாதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, 4 இளைஞா்கள், தள ஓடு(டைல்ஸ்) அளவீடு செய்வதற்காக வந்துள்ளதாக தெரிவித்துள்ளனா். இதையடுத்து 4 பேரையும் வீட்டிற்கு நுழைய சுஜாதா அனுமதித்துள்ளாா்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன், கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த இளைஞா்கள் சுஜாதாவை சோபாவில் அமர வைத்து கட்டி வைத்துள்ளனா். பின்னா் அவா் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கைப்பேசியை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனா்.

ADVERTISEMENT

அப்போது, சுஜாதாவின் கைப்பேசிக்கு துரை தொடா்பு கொண்டுள்ளாா்.

அழைப்பை ஏற்று பேசிய அந்த இளைஞா்கள், பணம் மற்றும் சங்கிலியை கொள்ளையடித்துச் செல்வதாகக் கூறிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

இதனிடையே பக்கத்து வீட்டில் வசிப்பவா்களை தொடா்பு கொண்ட துரை, தகவலை தெரிவித்துள்ளாா். அக்கம் பக்கத்தினா் வருவதற்குள் கொள்ளையா்கள் தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சாா்பு-ஆய்வாளா் ரபீக் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT