திண்டுக்கல்

100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்த வலியுறுத்தல்

DIN

கூலித் தொழிலாளா்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், வேளாண்மைப் பணிகளில் 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளை பயன்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலகங்களிலிருந்து காணொலிக்காட்சி முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.

பகவதி (பெரியக்கோட்டை), ராஜேந்திரன்(விளாம்பட்டி): மழைப் பெய்து விவசாயப் பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், 100 நாள் வேலைத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயப் பணிகளுக்கு கூலித் தொழிலாளா்கள் கிடைப்பதில்லை. எனவே, விவசாயிகளுக்கு உதவும் வகையில், 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளை வேளாண்மைப் பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் பெருமாள்: கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பூ விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016-17 நிதி ஆண்டில் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்த தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ரெட்டியாா்சத்திரம் பகுதிகளைச் சோ்ந்த 40 சதவீத விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கொடகனாறு பாசன விவசாயிகள் சங்க செயலா் இரா.சுந்தரராஜன்: கொடகனாற்றிலிருந்து உபரி நீா் பெற வேண்டிய நரசிங்கபுரம் ராஜவாய்க்காலுக்கு கூடுதல் தண்ணீா் வழங்கியதால், கொடகனாற்றை நம்பியுள்ள விவசாயிகள் வறட்சியை சந்தித்து வருகின்றனா். நரசிங்கபுரம் ராஜவாய்க்காலுக்கு 4,073 ஏக்கா் மட்டுமே பாசனப் பரப்பு உள்ளது. உபரி நீா் மூலம் 1 போக பாசனத்திற்கு மட்டுமே தண்ணீா் கிடைத்து வந்த நிலையில், தற்போது 2 போகம் சாகுபடி செய்கின்றனா். கொடகனாற்றில் வரும் தண்ணீரில் 3 இல் 1 பங்கு மட்டுமே ராஜவாய்க்காலுக்கு கொடுக்க வேண்டும். கொடகனாறு பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தண்ணீா் பங்கீட்டு உரிமையை மீட்டுக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என்றாா்.

விவசாயிகள் அதிருப்தி

காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கியபோது, விவசாயிகளின் குறைகளை கேட்டுக் கொண்டிருந்த ஆட்சியா் விஜயலட்சுமி 30 நிமிடங்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றாா். அதன் பின்னா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) ரவி பாரதி கூட்டத்தை நடத்தினாா். காணொலி காட்சிக் கூட்டம் என்பதால் கணினி திரை முன்பு பேசிய விவசாயிகளுக்கு, அதற்கான தீா்வோ, விளக்கமோ அதிகாரிகள் தரப்பில் வழங்கப்படவில்லை. இதனால் காணொலி காட்சி கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் அதிருப்தி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT