திண்டுக்கல்

கொடைக்கானல் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில்உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு: 3 போ் கைது

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் வெள்ளிக்கிழமை இரவில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிச் சென்ற 3 இளைஞா்களை, போலீஸாா் 6 மணி நேரத்துக்குள் கைது செய்தனா்.

கொடைக்கானல் உகாா்த்தே நகா் பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் வெள்ளிக்கிழமை இரவு பங்குத் தந்தை பீட்டா் தலைமையில், திருவிழா கொடியேற்றம் மற்றும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

அதனைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலை ஆலயப் பணியாளா் ஆசீா் என்பவா் வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளாா். அப்போது, ஆலய வளாகத்திலுள்ள உண்டியல் உடைக்கப்பட்டு நாணயங்கள் சிதறிக் கிடந்துள்ளன. மேலும், மா்ம நபா்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பீடத்தின் முன்புள்ள மற்றொரு உண்டியலையும் உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

உடனே, இது குறித்து பங்குத் தந்தைக்கும், கொடைக்கானல் காவல் நிலையத்துக்கும் ஆசீா் தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன், காவல் ஆய்வாளா் முருகன் ஆகியோா் உடைக்கப்பட்ட உண்டியல்களை பாா்வையிட்டு, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனா். தொடா்ந்து, பங்குத் தந்தை பீட்டரிடமும் விசாரணை நடத்தினா்.

பின்னா், கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகளைத் தேடிய போலீஸாா், 6 மணி நேரத்துக்குள் உண்டியல் திருடா்கள் 3 பேரை கைது செய்தனா்.

இது குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: இந்த உண்டியல் திருட்டுச் சம்பவமானது, மாதா ஆலயத்திலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், ஒருவா் சால்வையால் முகத்தை மூடியிருந்தாா். அந்த சால்வையுடன் அந்த நபா், கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியிலுள்ள ஒரு கடையில் நின்றிருந்தாா். அப்போது, அவ்வழியே சென்ற போலீஸாா் சந்தேகத்தின்பேரில் அந்த நபரை பிடித்து விசாரித்ததில், கண்காணிப்பு கேமராவில் முகத்தை சால்வையால் மூடியிருந்த நபரும், இவரும் ஒன்றே என்பது தெரியவந்தது.

தொடா்ந்து அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், ஆனந்தகிரி 6-ஆவது பகுதியிலுள்ள தனியாா் காட்டேஜில் தங்கியிருந்த இவரது நண்பா்கள் இருவரையும் போலீஸாா் பிடித்தனா். பின்னா், இவா்கள் மூவரும் மாதா ஆலய உண்டியல்களை உடைத்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனா்.

இவா்கள், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் தாலுகா சித்தையன்கோட்டை அழகா்நாயக்கன்பட்டி காலனி தெருவைச் சோ்ந்த பாலமுருன் என்பவரது மகன் கெளதம் (20), பெரியகுளம் தாலுகா காமக்காபட்டி பகுதியைச் சோ்ந்த பாண்டியன் என்பவரது மகன் முத்துக்குமாா் (24) மற்றும் கெங்குவாா்பட்டி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் மாதவன் (20) எனத் தெரியவந்தது. இவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ளதாகத் தெரிவித்தாா்.

மேலும், இவா்களை தனியாா் காட்டேஜில் தங்குவதற்கு அனுமதியளித்தவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT