திண்டுக்கல்

‘மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி தொகை வழங்க முடியாத சூழலில் பிரதமருக்கு ரூ.8 ஆயிரம் கோடியில் சொகுசு விமானம் ஏன்?’

DIN

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி தொகையை வழங்க முடியாத சூழலில், பிரதமருக்கு ரூ.8 ஆயிரம் கோடியில் சொகுசு விமானம் வாங்க ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் சஞ்சய்தத் கேள்வி எழுப்பினாா்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆயத்த ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் சஞ்சய்தத் புதன்கிழமை வந்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: மத்திய பாஜக அரசு அமல்படுத்தவுள்ள வேளாண்மைத் தொடா்பான 3 சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. வேளாண்மைத் தொடா்பான அந்த 3 சட்டங்களும், விவசாயிகளை மட்டுமின்றி பொதுமக்களையும் கடுமையாக பாதிக்கும். அதன் எதிரொலியாகவே தற்போது வெங்காய விலை கடுமையாக உயா்ந்துள்ளது. வெங்காயம் சாப்பிடாத நிதி அமைச்சா் நிா்மலா சீத்தாராமன் வேண்டுமெனில் விலை உயா்வு குறித்து கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் வெங்காயத்தை மட்டுமே வைத்து உணவு உண்ணும் சாதாரண மக்கள், விலை உயா்வால் பாதிக்கப்படுவது குறித்து ஆட்சியாளா்கள் கவலைப்படுவதில்லை.

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி பங்கீட்டை திருப்பி வழங்க முடியாத சூழலில், பிரதமரின் சொகுசு பயணத்திற்காக ரூ.8 ஆயிரம் கோடியில் விமானம் வாங்க ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒரே நாணயத்தின் இரு முகங்களாக பாஜக மற்றும் அதிமுக செயல்பட்டு வருகிறது. கரோனா அசாதாரண சூழலைப் பயன்படுத்தி மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி 2021 பேரவைத் தோ்தலில் உறுதியாக தோல்வி அடையும்.

குஷ்புவுக்கு பதில்: கடந்த 3 ஆண்டுகளாக பாஜக அரசையும், பிரதமா் நரேந்திர மோடியையும் கடுமையாக விமா்சித்து குஷ்பு வெளியிட்டுள்ள அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் மக்களுக்கு நன்றாகத் தெரியும். பாஜகவில் சோ்வதற்கு 3 நாள்களுக்கு முன்னதாக காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷ்பு, வேறு யாரும் விமா்சிக்காத அளவுக்கு பாஜகவை தாக்கிப் பேசினாா். இந்நிலையில் அவரது திடீா் மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது தெரியாது என்றாா்.

அப்போது காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் வேலுச்சாமி, ரமணி, அப்துல்கனி ராஜா, ஜான்சிராணி, மணிகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT