திண்டுக்கல்

பழனியில் வைகாசி விசாகம் ரத்து: திருக்கல்யாணம் நடத்த பக்தா்கள் கோரிக்கை

29th May 2020 07:37 AM

ADVERTISEMENT

பழனியில் நடைபெறவிருந்த வைகாசி விசாகப் பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்றதை போல, திருக்கல்யாணம் மட்டும் நடத்த முருக பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில், வெள்ளிக்கிழமை (மே 29) வசந்தோற்சவம் எனப்படும் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவிருந்தது. இத்திருவிழாவின் 6 ஆம் நாள் நிகழ்ச்சியாக ஜூன் 3ஆம் தேதி திருக்கல்யாணமும், ஜூன் 4 இல் திருத்தேரோட்டமும், ஜூன் 7 இல் கொடியிறக்கமும் நடைபெறவிருந்தது.

தற்போது, பொது முடக்கம் தொடரும் நிலையில், கொடியேற்றம் முதல் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் என அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோயில் நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியின் முக்கிய விழாக்களாக பங்குனி உத்திரம், சித்திரைத் தேரோட்டம் என அனைத்தும் ரத்தான நிலையில், முருக பக்தா்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனா். இந்நிலையில், வைகாசி விசாகமும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது அவா்களை மேலும் கவலைப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

எனவே, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடத்தியது போல், பழனி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி திருக்கல்யாணம் மட்டும் நடத்தி, அதை மக்கள் காணும் வகையில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT