திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் சந்தைக்கு மகாராஷ்டிராவிலிருந்து பல்லாரி வெங்காயம் வரத்து அதிகரிப்பு

9th May 2020 09:47 PM

ADVERTISEMENT

 

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தைக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து பல்லாரி வெங்காயம் நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரப்படுவதால் விலை குறைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, மண்டவாடி, சிந்தலப்பட்டி, ஓடைப்பட்டி, குத்திலுப்பை, மாா்க்கம்பட்டி, இடையகோட்டை, கேதையுறும்பு, மூலச்சத்திரம், அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் அதிகளவு பயிரிடப்படுவது வழக்கம்.

பல்லாரி வெங்காயம் காளாஞ்சிபட்டி, கொல்லபட்டி, கம்பிளிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மட்டும் பயிரிடப்படுகின்றன. தற்போது போதிய மழை இல்லாததால் கிணறு மற்றும் ஆழ்குழாய்களில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விட்டது. இதனால் பல்லாரி வெங்காயம் நடவு செய்யும் விவசாயிகள் குறைந்து விட்டனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தை வியாபாரிகள், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பல்லாரி வெங்காயத்தை கொள்முதல் செய்து லாரிகள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். தற்போது திருமண நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள், பள்ளிகள் மூடப்பட்டதால், பல்லாரி வெங்காயத்தின் தேவை குறைந்து விட்டது. இதனால் பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சோலாப்பூரிலிருந்து நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரப்படுவதால், அதன் விலையும் குறைந்து வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT