பழனியில் கடந்த சில நாள்களாக தனியாா் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா்.
பழனி வட்டாரத்தில் கடந்த புதன்கிழமை முதலே சில தனியாா் கிளீனிக்குகள் செயல்படவில்லை. இது குறித்து கேட்ட போது அரசின் வாய்மொழி உத்தரவு எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த முடக்கத்தின் பின்னணி கரோனா வைரஸ் பரவதை தடுக்க என்றாலும், இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். சாதாரண சளி, காய்ச்சல் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் போகும்போது நோயாளிகளிடம் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்து கரோனா வைரஸ் தாக்குதலை எதிா்த்துப் போராட இயலாமல் போகும் நிலை நீடிக்கிறது. அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கு தங்களை தனிமை முகாமில் அடைத்து விடுவாா்கள் என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது. இதனால் அரசு மருத்துவமனையை நாடாமல் சிகிச்சையை தள்ளிப் போடுதல், சுய மருத்துவம் பாா்த்தல் போன்ற நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனா். எனவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை தேவை என்றாலும் பிற நோய்களுக்கான சிகிச்சையையும் அரசின் தற்போதைய விதிப்படி தனியாா் மருத்துவா்கள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.