பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முதலாம் எண் வின்ச், ஒரு மாத பராமரிப்புக்குப்பின் புதன்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.
மலைக்கோயிலுக்குச் செல்ல படிப்பாதை, 3 வின்ச் மற்றும் ரோப் காா் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் வின்ச் மற்றும் ரோப் காா் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும்.
இதன்படி முதலாம் எண் வின்ச் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி நிறுத்தப்பட்டு புதிய சாப்ட் மாற்றும் பணிகள் தொடங்கியது. பழுதான பாகங்கள் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் சரி செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து செவ்வாய்க்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்த பணிகள் திருப்திகரமாக இருந்ததைத் தொடா்ந்து புதன்கிழமை முதல் பக்தா்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டது.
இதற்காக வின்ச்-க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வின்ச் பெட்டிகளுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைகளை அா்ச்சகா்கள் செய்தனா். நிகழ்ச்சியில் பழனி கோயில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், பொறியாளா் குமாா், கண்காணிப்பாளா் முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.