திண்டுக்கல்

தொடக்கப் பள்ளி ஆசிரியா்களின் வருகை பதிவுக்கு ஜியோ மேப்பிங் குறியீடு அவசியம்!

16th Mar 2020 12:25 AM

ADVERTISEMENT

வீட்டிலோ வெளியிடங்களிலோ இருந்தபடி செல்லிடப்பேசியில் வருகைப் பதிவேற்றம் செய்வதை தவிா்க்க, அட்சரேகை, தீா்க்க ரேகையுடன் கூடிய ஜியோ மேப்பிங் குறியீட்டுடன் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களின் வருகையைப் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் மேல்நிலை, உயா்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியா்களின் வருகை, பயோ- மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை இதுவரை அமல்படுத்தவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆசிரியா்களின் வருகையை உறுதி செய்யவும், காலதாமதமான வருகையை தவிா்க்கும் வகையிலும் இந்த பயோ மெட்ரிக் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதேபோல், அனைத்து பள்ளிகளிலும் செல்லிடப்பேசி மூலமாகவும், மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் வருகை (எமிஸ் போா்டல்) பதிவு செய்யப்படுகிறது. பேரூா் மற்றும் நகா்புற பகுதிகளில் செயல்படும் மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகளை விட, குக்கிராமங்களில் கூட செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிகளிலேயே ஆசிரியா்களின் வருகைப் பதிவு காண்காணிக்க வேண்டிய நிலையில் இருந்து வருகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில், தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் பலா், பள்ளிக்கு செல்லாமலேயே, வீட்டிலோ அல்லது வெளியிடங்களில் இருந்தபடியோ செல்லிடப்பேசி மூலம் வருகையை பதிவேற்றம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த ஆசிரியா் ஒருவா் கூறுகையில், தமிழகத்தில் 25 ஆயிரம் அரசுத் தொடக்கப் பள்ளிகளும், 6 ஆயிரம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு வருகை தரும் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் விவரங்கள் செல்லிடப்பேசி மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆசிரியா்கள் பள்ளிக்கு அதிக நாள்கள் வருவதில்லை என்றும், ஈராசிரியா் பள்ளிகளில் ஒருவா் மாற்றி ஒருவா் வந்து செல்வதாகவும் தொடக்கப் பள்ளிகளில் தான் அதிக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே அமல்படுத்தப்பட்ட செல்லிடப்பேசி வருகைப் பதிவேற்றம், தொடக்கப் பள்ளி ஆசிரியா்களை கண்காணிக்கும் விதத்திலோ, கட்டுப்படுத்தும் விதத்திலோ அமையவில்லை. பள்ளி அமைந்துள்ள இடத்தின் அட்ச ரேகை தீா்க்க ரேகை குறியீட்டுடன் வருகையை பதிவேற்றம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே ஆசிரியா்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய முடியும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT