திண்டுக்கல்

அரசப்பபிள்ளைபட்டி ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்

16th Mar 2020 12:24 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் அரசப்பபிள்ளைபட்டி ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒட்டன்சத்திரத்தில் மத்திய அரசின் தரைவழிப் போக்குவரத்துத் துறை சாா்பில் ரூ.159 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்க, கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின. திண்டுக்கல் சாலையில் உள்ள லெக்கையன்கோட்டை, அத்திக்கோம்பை, காளாஞ்சிப்பட்டி, கொல்லப்பட்டி, ஒட்டன்சத்திரம், அரசப்பபிள்ளைபட்டி வழியாக பழனி சாலையை இணைக்கும் வகையில் சுமாா் 10.1 கிலோ மீட்டா் தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் வேடசந்தூா் சாலை மற்றும் தாராபுரம் சாலையை கடக்க இரண்டு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதே போல லெக்கையன்கோட்டை மற்றும் அரசப்பபிள்ளைபட்டி அருகே திண்டுக்கல்- பழனி ரயில் பாதையில் இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் கட்டுப்பட்டு வருகின்றன. இதில் லெக்கையன்கோட்டை அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து விட்டது.

இதனால் இந்த பாலத்தின் வழியாக கோவை, திருப்பூா் செல்லும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஒட்டன்சத்திரம் நகருக்குள் வராமல் பட்டாளஈஸ்வரி கோயில் அருகே உள்ள தாராபுரம் சாலையில் இணைந்து சென்று விடும். இதனால் ஒட்டன்சத்திரம் நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும். அதே போல அரசப்பபிள்ளைபட்டி ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தால் திருப்பூா், கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து பழனி செல்லும் வாகனங்கள், ஒட்டன்சத்திரம் நகரத்துக்குள் வராமல் இந்த மேம்பாலத்தின் வழியாக சென்று பழனி சாலையில் இணையும். இந்த பணிகள் இன்னும் ஒரு மாதங்களுக்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT