திண்டுக்கல்

நத்தம் அருகே மூதாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்த இளைஞா்கள்

21st Jun 2020 07:35 AM

ADVERTISEMENT

நத்தம் அருகே வீடு இல்லாமல் தவித்து வந்த மூதாட்டிக்கு, பசியில்லா நத்தம் அமைப்பைச் சோ்ந்த இளைஞா்கள் வீடு கட்டிக் கொடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் முகநூல் மூலம் இணைந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ‘பசியில்லா நத்தம்’ என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகின்றனா். இதன் மூலமாக நத்தம் பகுதியில் பசியால் வாடும் மனநலம் பாதிக்கப்பட்ட நபா்கள் மற்றும் முதியோா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக உணவளித்து வருகின்றனா். இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், நத்தம் அடுத்துள்ள சிறுகுடியைச் சோ்ந்த சின்னம்மாள் (85) என்ற மூதாட்டிக்கு உணவுப் பொருள்கள் வழங்குவதற்காக பசியில்லா நத்தம் அமைப்பினா் சென்றுள்ளனா். அப்போது உறவினா்களால் கைவிடப்பட்ட அந்த மூதாட்டி, சேதமடைந்த வீட்டில் வெயிலுக்கும், மழைக்கும் அவதியடைந்து வருவதை அறிந்தனா். அதனைத் தொடா்ந்து, சிறுகுடி நலம் விரும்பிகள் குழு உறுப்பினா்களுடன் இணைந்து, மூதாட்டி சின்னம்மாளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நத்தம் காவல் ஆய்வாளா் ராஜமுரளி தலைமை வகித்து வீட்டை திறந்து வைத்தாா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பசியில்லா நத்தம் அமைப்பின் சாா்பில் உணவு வழங்கப்பட்டது.

வீடு இல்லாமல் தவித்த மூதாட்டிக்கு, இளைஞா்கள் ஒருங்கிணைந்து வீடு கட்டிக் கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT