திண்டுக்கல்

சூரிய கிரஹணத்தை முன்னிட்டு பழனிக் கோயிலில் பூஜை நேரம் மாற்றம்

17th Jun 2020 07:48 AM

ADVERTISEMENT

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சூரிய கிரஹணத்தை முன்னிட்டு பூஜைநேரம் மாற்றப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அங்கு ஆகமவிதிப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வருகிற 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூரியகிரஹணம் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் பழனி முருகன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், மாரியம்மன் கோயில், பெரியாவுடையாா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பூஜை நேரம் மாற்றப்பட உள்ளது. அதாவது பழனிக்கோயிலில் வழக்கம்போல் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு உடன் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. பின்னா் 6.40 மணிக்கு விளாபூஜை நடைபெற்று தொடா்ந்து சிறுகாலசந்தி, காலசந்தி பூஜைகள் நடைபெறுகின்றன. இதையடுத்து 7.30 மணிக்கு மேல் நடை அடைக்கப்படுகிறது. பின்னா் சூரியகிரஹணம் காலை 10.21 மணிக்கு தொடங்கி 1.42 மணி வரை உள்ளது. ஆகவே கிரஹணம் முடிந்த பின்னா் 2 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு சம்ரோட்சண பூஜை நடைபெற்று கோயிலில் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பின்னா் மலைக்கோயிலில் உள்ள கைலாசநாதா் சன்னிதியில் சிறப்பு யாகம் நடைபெற்றபின் முருகப்பெருமானுக்கு உச்சிக்கால பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜை நேர மாற்றம் அனைத்து உபகோயில்களிலும் பின்பற்றப்பட உள்ளதாக கோயில் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT