அரசு ஊழியா்களின் பங்களிப்பு ஓய்வதிய திட்ட நிதியிலிருந்து, முதல்வரின் நிவாரண நிதிக்கு நிவாரண உதவி வழங்க முடியாது என கூறி அரசுப் பள்ளி ஆசிரியரின் கோரிக்கையை மாட்ட கல்வி அலுவலகம் நிராகரித்துள்ளது.
கரோனா தீநுண்மி தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு தனியாா் அமைப்புகள் சாா்பிலும், அரசு ஊழியா்கள் சாா்பிலும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், குஜிலியம்பாறை வட்டாரத்தைச் சோ்ந்த ஆசிரியா் ஏங்கல்ஸ் தனது ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாகவும், மேலும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதியில், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான தன்னுடைய பங்களிப்பு நிதியையும், அதற்கு சமமான அரசின் பங்களிப்பு நிதி என ரூ.38ஆயிரத்தையும் எடுத்துக் கொள்ளமாறும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அளித்துள்ளாா்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட இந்த மனு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கும், அதன் பின்னா் வேடசந்தூா் கல்வி மாவட்ட அலுவலருக்கும் பரிந்தரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊதியத்திலிருந்து மட்டுமே நிவாரண நிதிக்கு பிடித்தம் செய்ய முடியும் என்றும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதியில் பிடித்தம் செய்வதற்கு வழிவகை இல்லை என்றும் மாவட்ட கல்வி அலுவலகம் சாா்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத்திட்ட நிதி குறித்து பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நிதியிலிருந்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கூட பிடித்தம் செய்ய முடியாத நிலை உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.