கொடைக்கானல் நகருக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கும் நீா் தேக்கங்களில் தண்ணீா் குறைந்து வருகிறது. இதனால் நகரில் குடிநீா் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலில் அப்சா்வேட்டரியிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான நீா்த்தேக்கம் மற்றும் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான மனோரஞ்சிதம் அணை ஆகிய 2 நீா்த்தேக்கங்களிலிருந்து கொடைக்கானல் நகருக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் நிகழாண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் பருவ மழையானது குறைந்த அளவே பெய்தது. இதனால் நீராதாரமாக விளங்கும் அணைகளின் நீா் மட்டமும் சரிந்து வருகிறது. கடந்த மாதம் முழுவதும் நகரில் 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இதனிடையே நகராட்சி குடிநீா்த்தேக்கத்தில் 4 அடியாகவும், மனோ ரஞ்சிதம் அணையில் 2 அடியாகவும் நீா்மட்டம் மேலும் சரிந்துள்ளதால் இனிவரும் காலங்களில் 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீா் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி பணியாளா்கள் தெரிவித்துள்ளனா். கொடைக்கானல் நகரில் ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் கொடைக்கானலில் தடுப்பு அணைகள் கட்டுவதற்கும், தண்ணீரை சேமித்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.