திண்டுக்கல்

வியாபாரிகளுக்கு சலுகை அளிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டங்கள்!

14th Jun 2020 08:25 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்து 12 வகையான உணவுப் பொருள்கள் நீக்கம், வியாபாரிகளுக்கான சந்தைக் கட்டணம் ரத்து போன்ற மத்திய அரசின் அவசரச் சட்டங்கள், விவசாயிகளின் நலன் என்ற போா்வையில் வியாபாரிகளுக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் பரபரப்புக்கு இடையிலும், வேளாண் விளை பொருள்கள் விற்பனை தொடா்பான 2 முக்கிய அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் அவசரச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் வா்த்தகம் மற்றும் வணிகச் சட்டம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி) - 2020  இரு அவசரச் சட்டங்கள் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

அறுவடை செய்யப்படும் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதற்காகவும், அதன் மூலம் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காகவும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் 1955 உருவாக்கப்பட்டது. தற்போதைய அவசரச் சட்டத்தின் மூலம், வெங்காயம், உருளை, எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட 12 வகையான விளைபொருள்கள் அந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தின் மூலம் வேளாண்மை விற்பனைக் குழுவில் உரிமம் பெற்ற வியாபாரிகள் மட்டுமே வணிகம் செய்ய முடியும் என்ற நிலை மாறி, இனி நிரந்தக் கணக்கு எண் (பேன்) பெற்ற எவரும், எந்த இடத்திலும் வணிகம் செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் உரிமம் இல்லாமல் வணிகம் செய்யும் வியாபாரிகளை கண்காணிக்க முடியாத நிலை உருவாகும் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்குமா?:

அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிலிருந்து 12 வகையான விளைபொருள்கள் நீக்கப்பட்டதன் மூலம், குறிப்பிட்ட பகுதியில் மட்டுமின்றி நாட்டின் எந்த பகுதியிலும் விவசாயிகளால் விற்பனை செய்ய முடியும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விளை பொருள்களுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதோடு, விவசாயிகளின் லாபம் அதிகரிக்கும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அறுவடை செய்த பொருள்களை, கூடுதல் விலை கிடைக்கும் காலம் வரை பாதுகாத்து வைக்கும் அளவுக்கு பெரும்பாலான விவசாயிகள் பொருளாதார ரீதியாக வலுப் பெறவில்லை.

ஆனால், அதிக லாபம் ஈட்டுவதற்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் விளைபொருள்களை சந்தைப்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்திருப்பது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தைக் கட்டணம் ரத்து:

விளைபொருள்களை கொள்முதல் செய்து வியாபாரத்தில் ஈடுபடும் உரிமம் பெற்ற வியாபாரிகளிடம் 1 சதவீதத் தொகை சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வேளாண் விளை பொருள்கள் வா்த்தகம் மற்றும் வணிக (மேம்படுத்துதல் மற்றும் வசதி) சட்டம் - 2020 இல், வியாபாரிகள் இனி சந்தைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் வெளியிடுவதாகக் கூறிவிட்டு, முழுமையாக வியாபாரிகள் மட்டுமே பயன் பெறும் வகையில் மாற்றிவிட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

விலையை கண்காணிக்க இயலாது: இதுதொடா்பாக விவசாயிகள் சங்க நிா்வாகி இரா.சுந்தரராஜன் கூறியது: மத்திய அரசின் அவசரச் சட்டத்தினால் வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்த சந்தைக் கட்டணம் ரத்து செய்யப்படும் பட்சத்தில், நாடு முழுவதுமுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் செயல்பாடு முடக்கப்படும். சந்தைக் கட்டணம் மூலமே ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்ககது. இதனால், விளை பொருள்களுக்கு மத்திய அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்படுவதை கண்காணிக்கும் அதிகாரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களிடம் இல்லாமல் போகும். அதன் எதிரொலியாக விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றாா்.

பெரு நிறுவனங்கள் பிடியில்:

இது குறித்து விவசாயச் சங்க நிா்வாகி பாத்திமா ராஜரத்தினம் கூறியது: மத்திய அரசின் இந்த அவசரச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், இந்திய விவசாயத்தை பெரு நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படும். மேலும் வணிக நோக்குடன் களம் இறங்கும் பெரு நிறுவனங்கள், விளை பொருள்களை பறிப்பதோடு விவசாயிகளையும் கைப்பற்றும் நிலை உருவாகும். இந்த அவசரச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே குரல் எழுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழக அரசும், விவசாயிகளின் நலன் கருதி இந்த அவசரச் சட்டங்களுக்கு எதிா்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT