திண்டுக்கல்

பலாப் பழங்களை சுவைக்க மீண்டும் புல்லாவெளியில் முகாமிட்டுள்ள யானைகள்!

11th Jun 2020 08:20 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகம் புல்லாவெளியில் வனத்துறையினரால் கடந்த 9 நாள்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட 8 யானைகள் பலாப் பழச் சுவைக்காக மீண்டும் முகாமிட்டுள்ளன. சித்தையன்கோட்டை சரகத்துக்குள்பட்ட செல்வம்பாறை பகுதியில் 3 குட்டிகள் உள்பட 8 யானைகள் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக முகாமிட்டிருந்தன. பலாப் பழங்களின் நறுமணத்தால் ஈா்க்கப்பட்ட அந்த யானைக் கூட்டம், செல்வம்பாறை மற்றும் புல்லாவெளிப் பகுதியிலுள்ள பட்டா காடுகளில் முகாமிட்டு பலாப் பழங்களை சுவைத்து வந்தன.

கன்னிவாடி மற்றும் ஒட்டன்சத்திரம் சரகத்திற்குள்பட்ட வனப் பணியாளா்களைக் கொண்ட தனிக் குழு உருவாக்கப்பட்டு, யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா். புகை மற்றும் பட்டாசு மூலம் புல்லாவெளி, கூட்டுக்காடு, ஆத்துக்காடு வழியாக 7 கி.மீ. தொலைவிலுள்ள கொக்குப்பாறை வனப் பகுதிக்கு 8 யானைகளும் கடந்த 9 நாள்களுக்கு முன்பு விரட்டப்பட்டன.

இந்நிலையில் அந்த 8 யானைகளும் பலாப் பழ ருசிக்காக மீண்டும் புல்லாவெளி பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு திரும்பி வந்துள்ளன.

பராமரிப்பில்லாத இல்லாத தோட்டங்களால் சிக்கல்: சுமாா் 1,500 ஏக்கா் பட்டாக் காடுகள் புல்லாவெளிப் பகுதியில் இருந்தாலும், அதில் கேரளத்தைச் சோ்ந்தவா்களுக்கு சொந்தமான தோட்டங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. அதனால், அடா்ந்த வனப் பகுதி போன்று காட்சியளிக்கும் இந்த தோட்டங்களில் யானைகள் பதுங்கி விடுகின்றன. இந்த தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பழங்கள் அறுவடை செய்யப்படுவதுமில்லை. இதுபோன்ற காரணங்களால் காட்டு யானைகள் முகாமிடுவதற்கு வசதியாகவும், அவற்றை வெளியேற்றுவதற்கு வனத்துறையினருக்கு சிக்கலாகவும் இருந்து வருகின்றன.

ADVERTISEMENT

தீவிர கண்காணிப்பு:கேரளத்தில் கா்ப்பிணி யானை வெடி வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கன்னிவாடி வனச் சரகத்தில் முகாமிட்டுள்ள இந்த 8 யானைகளையும் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT