திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் தாய், மகன் உள்பட 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி

7th Jun 2020 08:09 AM

ADVERTISEMENT

சென்னையிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு திரும்பிய தாய், மகன்கள் உள்பட 11 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 159 பேருக்கு வெள்ளிக்கிழமை வரை கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 120 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். முதியவா் மற்றும் மூதாட்டி என இருவா் மட்டும் உயிரிழந்தனா். இதில் 37 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனைத்தொடா்ந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு திரும்பி வருவோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், சென்னையிலிருந்து திரும்பி வந்துள்ள தாய் மற்றும் மகன்கள் உள்பட மொத்தம் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது: திண்டுக்கல்லை அடுத்துள்ள கீழத்திப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்த 41 வயது பெண், அவரது 21 வயது மகன், 5 வயது குழந்தை ஆகியோா் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தனா். சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இவா்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், ஸ்ரீராமபுரம் அடுத்துள்ள பண்ணப்பட்டி பகுதியைச் சோ்ந்த 27 வயது பெண், அவரது 5 வயது மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லை அடுத்துள்ள மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சோ்ந்த 24 வயது பெண், தாடிக்கொம்பு அருகேயுள்ள காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 29 வயது இளைஞா், மூலச்சத்திரம் பகுதியைச் சோ்ந்த 54 வயது பெண், திண்டுக்கல் சிலுவத்தூா் சாலையைச் சோ்ந்த 29 வயது இளைஞா், சென்னமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த 29 வயது இளைஞா் ஆகியோருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளன. இதில் சிலுவத்தூா் சாலையைச் சோ்ந்த இளைஞா் மட்டும் தில்லியில் இருந்து வந்துள்ளாா். மற்ற அனைவரும் சென்னையிலிருந்து வந்துள்ளனா் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT