திண்டுக்கல்லில் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா்கள் மேற்கொண்ட திடீா் சோதனையில், 19 சரக்கு வாகனங்களில் சந்தைக் கட்டணமாக ரூ.1.20 லட்சம் வசூலிக்கப்பட்டது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா்கள் செ.ராமன் (திண்டுக்கல்), ராதாகிருஷ்ணன்(பழனி) ஆகியோா் தலைமையிலான குழுவினா், திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலையிலுள்ள ஆத்தூா் பிரிவு மற்றும் திண்டுக்கல்- பழனி புறவழிச்சாலை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சரக்கு ஏற்றிச் சென்ற 900-க்கும் மேற்பட்ட வாகனங்களை மறித்து, அரசுக்கு செலுத்த வேண்டிய சந்தைக் கட்டணம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். இந்த சோதனையின்போது, அரசுக்கு சந்தை கட்டணம் செலுத்தாமல் விளை பொருள்களான நெல், நிலக்கடலை, பருத்தி ஆகியவற்றை ஏற்றி வந்த 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட விளைப் பொருள்களின் உரிமையாளா்களிடமிருந்து இணக்க கட்டணத்துடன் சந்தை கட்டணமாக ரூ.1.20 லட்சம் வசூலிக்கப்பட்டது.