கன்னிவாடி அருகே வீட்டுமனை வழங்கக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்குள்பட்ட குள்ளம்பட்டி ஆதிதிராவிடா் காலனி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வீட்டுமனை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது: குள்ளம்பட்டி பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிடா் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனை அடுத்து கடந்த 1986ஆம் ஆண்டு கோடல்வாவி கிராமத்தில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிலத்தில் 42 குடும்பங்களுக்கு பட்டாவும் வழங்கப்பட்டது. இதனிடையே, தனி நபா் ஒருவா் அந்த நிலம் தனக்கு சொந்தமானதாக கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.
35 ஆண்டுகள் நடைபெற்று வந்த அந்த வழக்கு அண்மையில் முடிவுக்கு வந்தது. இதனிடையே, கோடல்வாவி கிராமம் வழியாக 4 வழிச்சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், 4 வழிச்சாலைக்கான நிலத்தை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள நிலத்திற்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்து வருகின்றனா். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா கேட்டு போராடி வரும் குள்ளம்பட்டி கிராம மக்களுக்கு நிலம் வழங்காமல், வேறு பயனாளிகளை தோ்வு செய்து வருகின்றனா். இதனை தடுத்து முன்னுரிமை அடிப்படையில் குள்ளம்பட்டி மக்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.